பக்கம் : 1255
 
  மந்தரத்தை வலஞ்சூழ்ந்து 1வருபவரு நிற்பவரும்
2சுந்தரஞ்சேர் மணிமுடியார் சுடர்பவருஞ் சோதிடரே.
 
     (இ - ள்.) சந்திரரும் - திங்களும், சூரியரும் - ஞாயிறும், தாரகையும் -
உடுக்கூட்டங்களும், நாண் மீனும் - அசுவினி முதலிய விண்மீன்களும், வெந்திறல
கோள்களும் - வெவ்விய ஆற்றலுடைய கோள்களும், ஆம் என விளங்கி - ஆகும் என்று
அறிஞராற் கூறப்பட்டு விளக்கமுடையவராய், விசும்பு ஆறா - வான் வழியாக, மந்தரத்தை
வலம் சூழ்ந்து - இமய மலையை வலம் படச் சுற்றி, வருபவரும் - இயங்குவோரும்,
நிற்பவரும் - நிலைத்து நிற்பவரும், சுந்தரம் சேர் மணிமுடியாய் - அழகுடைய மணிபதித்த
முடியணிந்த வேந்தே, சுடர்பவரும் - ஒளிபரப்புபவரும், சோதிடரே - சோதிடர்
என்பவராவர் ; (எ - று.)

     சந்திரர் சூரியர் நாண்மீன் கோள்கள் என்று விளக்கி மேருவினை வலம் வருபவரும்
நிற்பவரும் சோதிட தேவர் என்க.

(935)

 

இத்தேவர் கதியிற்படுவோர் இவரெனல்

2046. எண்ணியமுத் 3தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க்
4கண்ணியறு நற்காட்சிக் கதிர்விளக்குத் 5தூண்டினார்
6நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று
7புண்ணியங்கள் படைத்தாரக் 8குழுவினிடைப் பொலிவாரே.
 
     (இ - ள்.) எண்ணிய முத்தேவர்களும் - ஈண்டு எண்ணிக்கூறப்பட்ட பவணர்
வியந்தரர் சோதிடர் என்னும் மூன்றுவகைத் தேவர்களும், இவர் மடந்தையவரும் ஆய் -
இவர்கட்குத் தலைவியராய மகளிரும் ஆகி, கண் இயல் தூ - கருதத்தக்க இயல்பமைந்த
தூய்மையான, நற்காட்சிக் கதிர் விளக்குத் தூண்டினார் - நற்காட்சி என்னும் சுடர்விளக்கைத்
தம்முள் ஏற்றி மேலும் தூண்டினவர்கள் தாம், நண்ணுபவோ எனின் - இவ்வானுலகத்தே
எய்துவரோ என்று நீ வினவுவாயாயின், நண்ணார் - அத்துணையானே, இப்பிறவியை
எய்தமாட்டார், நல்விரதம் தலைநின்று - அக்காட்சியோடே நல்ல விரத வொழுக்கத்திலும்
சிறந்து, புண்ணியங்கள் படைத்தார் - அறஞ் செய்தோர்களே, அக்குழுவினிடைப் பொலிவார்
- அம் முவ்வகைத் தேவர் கூட்டத்தே பிறந்து விளங்குவார்கள், (எ - று.)

     நல்ல விரதங்களை மேற்கொண்டு புண்ணியங்கள் செய்தோரே அத் தேவராவர் என்க.

    (936)

 

     (பாடம்) 1 வருமவரு. 2 சுந்தரமணி. 3தேவரு. 4கண்ணியநற். 5தூண்டனார்.

     6நண்ணிபவெனி. 7புண்ணியம் படைத்தார்கள். 8குழுவினுளாவரே.