பக்கம் : 1257
 

     மந்தர மலையின் முடியிலே உள்ள அந்தரவுலகத்தே வாழும் தேவர்கள்
இந்திவில்லைப்போற் றோன்றி மணியுருப் படைத்துத் தோன்றுவர் என்க.

 (938)

 
2049. அலர்மாரி மேற்சொரிவா ரமிர்தநீ ராட்டுவார்
1பலமாண்ட கலனணிந்து பலாண்டிசைப்பார் பாடுவார்
மலர்மாண்ட மணிக்கவரி மருங்கசைப்பார் மடந்தையரைச்
சிலர்மாணச் சேர்த்துவார் தேவரா யதுபொழுதே.
 
     (இ - ள்.) தேவர் ஆயது பொழுதே - இவ்வுலகத்தே புண்ணியம் புரிந்து தேவராகிய
அப்பொழுதே, அலர் மாரிமேற் சொரிவார் - முன்னர்த் தேவராயோர் மலர்மாரியை
இப்புதிய தேவர் மேலே பொழிவார், அமிர்த நீராட்டுவார் - அமிர்தமாகிய கடவுள் நீரிலே
ஆடச்செய்வர், பலமாண்ட கலன் அணிந்து - பலவாகிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை
அணிவித்து, பலாண்டு இசைப்பார் - பல்லாண்டு கூறி வாழ்த்துவர், பாடுவார் - இசை
பாடுவார், மலர் மாண்ட மணிக்கவரி மருங்கு அசைப்பார் - மலராலே மாட்சிமைப்பட்ட
மணிக்காம்புடைய சாமரைகளைப் பக்கத்தே நின்று இரட்டுவர், சிலர் மாண மடந்தையரைச்
சேர்த்துவார் - வேறுசிலர், இன்பத்தாலே மாட்சிமைப்படுமாறு தேவமகளிரொடு திருமணம்
புணர்த்துவர், (எ - று.)

     புதிதாக ஒருவர் தேவராகும் பொழுது பழைய தேவர்கள் மலர் மழை பொழிந்து
அமிர்த நீராட்டிக் கலனணிந்து பாடிக் கவரி யசைத்து மணம் புணர்த்துப் பாராட்டுவர்
என்க.

(939)

 
2050. ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி
வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர்
ஏடார்ந்த 2தொங்கலரா யின்பநீர்ப் பெருவெள்ளம்
நீடாரக் குளித்தாடு நிலைமையரே யவரெல்லாம்.
 
     (இ - ள்.) ஆடாதும் - நீராடுதல் இல்லாத பொழுதும், ஒளி திகழும் - ஒளி
பரப்பாநின்ற, ஆர் அணங்கு - பொருந்திய அழகையுடைய, திருமேனியராய் -
நல்லுடலையும், வாடாத கண்ணியினர் - ஒரு பொழுதும் வாடுதலில்லாத
முடிமாலையையுமுடையராய், மழுங்காத பூந்துகிலர் - புதுமை மழுங்காத அழகிய
ஆடையுடையராய், ஏடார்ந்த தொங்கலாய் - இதழ் பொருந்திய கற்பக மலர் மாலையை
அணிந்தவராய், இன்பநீர்ப் பெருவெள்ளம் - இன்பம் என்னும் நீராற்பெருகிய பெரிய
வெள்ளத்தே, ஆர நீடு குளித்து - உடலார நெடிது குளித்து, ஆடும் -
விளையாட்டாருகின்ற, நிலைமையரே அவர் எல்லாம் - சிறந்த நிலையை உடையவர் ஆவர்
அத்தேவர் பிறப்புற்றோரெல்லாம், (எ - று.)
 

     (பாடம்) 1 பலர் மாண்ட. 2தொங்கலா.