(இ - ள்.) தேங்குலாம் அலங்கல்மாலை - தேன் பெருகுகின்ற தொங்கி யசைவதான பூமாலையையும்; செறிகழல் - கட்டிய வீரக்கழலையுமுடைய; மன்னர்மன்ன! - அரசர்க்கரசனே!; பூங்குலாய் விரிந்த சோலை - மலர்கள் நிறைந்து மலரப்பெற்ற சோலைகள்; பொழிமதுத் திவலை தூவ - பெருகுகின்ற தேன் துளிகளைச் சிந்தும்படியாகவும்; கோங்கு எலாம் - கோங்க மரங்கள் எல்லாம்; குணம் இலார் செல்வமேபோல் - நற்குணங்களில்லாதவர்களிடத்திலே பொருந்திய செல்வத்தைப் போல; கமழமாட்டா - மணத்தை வெளிப்படுத்தாதனவாய்; பாங்கு எலாம் செம்பொன் பூப்ப - பக்கங்களில் எல்லாம் செவ்விய பொன்னிறமான பூக்களைப் பூப்ப; பருவம் விரிந்தது என்றாள் - வேனிற்காலம் வந்து பரவியது என்று கூறினாள், (எ - று.) |