பக்கம் : 1261
 
  பணியினமைத் திடல்குறிப்பிற்
பலவுருவு நனிகோடல்
துணிவமையு நெடுவேலோய்
சுடருடைய குணங்களே.
 
     (இ - ள்.) அணுவளவாய்ச் சிறுகுதல் - ஒரு சிறிய துகள் அளவிற்றாய்த்
தன்னுருவத்தைச் சுருக்குதலும், மற்று, அதிநுட்பம் - அவ் வணுவிலும் சிறிய உருக்கோடலும்,
மிகப்பெருகல் - அண்டமத்துணைத் தம்முருவைப் பெருகச் செய்தலும், நினைத்துழியே -
தம்மை நினைப்போர் நினைத்தபொழுதே, நணியவர்போல் - அவர்தம்
அண்மையிலிருந்தாரைப் போன்று, நண்ணுறுதல் - அவர்பால் எய்துதல், விழைதகைமை
பணியின் அமைத்திடல் - தாம் விரும்பும் தகுதியுடைய பொருள்களை நினைப்பு
மாத்திரையானே செய்தமைத்துக் கோடல், குறிப்பிற் பலவுருவும் நனிகோடல் - பல்வேறு
வடிவங்களை நினைத்த பொழுதே விரைந்து கொள்ளுதல், துணிவு அமையும் நெடு
வேலோய் - அஞ்சாமை எய்துதற்குக் காரணமான நீண்ட வேலையுடைய அரசனே,
சுரருடைய குணங்களே - இவையெல்லாம் தேவர்க்கு அமைந்த பண்புகளாம், (எ - று.)

     தேவர்கள் அணுவளவாகச் சுருங்குதல் பெருகல் நினைத்துழி நண்ணுதல்
விரும்பியவற்றை இயற்றல் பற்பல உருவங்கோடல் முதலிய குணங்களுடையர் என்க.

(946)

 
2057. அளிதருஞ்செங் 1கோலுடையோ
யமரருக்கு மந்தரமுண்
டொளியோடு பேரின்ப
முயர்ந்தவர்க்கே யுயர்ந்துளவாம்
தெளிதருநற் 2காட்சியது
திருந்தியமே னெடுந்தகையோர்க்
3கெளிதகவும் பெரும்பாலும்
பெறலேனோர்க் கரியவே.
 
     (இ - ள்.) அளிதரும் செங்கோல் உடையாய் - உலகை ஓம்புதல் செய்யும்
செங்கோன்மை உடைய வேந்தனே, அமரருக்கும் - அவ் வமரர்களுக்கும், அந்தரமுண்டு -
வேற்றுமை உண்டு, உயர்ந்தவர்க்கே - இவ்வுலகிற் போன்று ஆண்டும், தவப் பயனால்
உயர்ந்த தேவர்களுக்கு மட்டுமே, ஒளியோடு பேரின்பம் உயர்ந்துளவாம் - புகழ்ச்சியுடனே
இன்பப் பேறும் சிறப்பாக உள்ளன, தெளிதரு நற்காட்சியது - நன்ஞானத்தின் வழியதாகிய
நற்காட்சியும், திருந்திய - திருத்தமுறப் பெற்ற, மேல் நெடுந்தகையோர்க்கு - உயரிய
பெருந்தகைமையுடையவர்கட்கே, பெறல் - அவ்வின்ப முதலியவற்றை எய்துதல், எளிதாகவும்
- எளிமையாய் இயல்வதூஉம் ஆகும், பெரும்பாலும் ஏனோர்க்கு அரிய பெரும்பான்மையும்
அத்தகையோர் அல்லாத அமரர்கள் அவற்றை எய்துதல் அரிதே ஆகும்,
(எ - று.)
 

     (பாடம்) 1கோலோய். 2காட்சிதிருந். 3எளிதகவை.