பக்கம் : 1264
 

     (இ - ள்.) இன்பமே பெரிதாகி - இன்ப நுகர்ச்சியே மிக்கு, இடையறவு இன்றி -
அவ்வின்ப நுகர்ச்சிதானும் இடையறவு படாமல், இமைப்பளவும் - தம்மிமைகள் இமைத்திடும்
நாள்வரை, துன்பம் ஒன்று இல்லாத - துன்ப நுகர்ச்சி ஒரு சிறிதும் இல்லாததாகிய,
துறக்கத்திற் பெருஞ்செல்வம் - துறக்க நாட்டில் எய்திய பெரிய செல்வப்பேறு, மன் பெருந்
தவத்தினால் வரும் - உயிர்கட்கு நிலைத்த தவப்பயனாக வருவதாம், ஒரு நாள் ஈறுடையது
- அப்பேறு தானும் ஒருநாள் முடிவுடையது, என்று அடிகள் தரு பொருள் தெளிந்தார் -
என்று அருகபரமன் அருளிய பரமாகமத்தின் உட்பொருளினை நன்கு ஆராய்ந்து தெளிந்த
சான்றோர், அன்பு அதன் மிசையே - அந்நிலைபேறில்லாத இன்பத்தின்பால் அவா விலர்,
(எ - று.)

     இலர் என்றொரு சொல் வருவித்துக்கொள்க. தேவராய்ப் பிறந்தோர் தம் அறப்பயன்
தீர்ந்துழித் தம் கண் இமைக்கப் பெறுவர் என்றும் அக்கண்ணிமைத்தல் தொடங்கி
அளவிலாத் துயரின் மூழ்கிச் சின்னாளில் இறப்பர் என்றும் கூறுப ஆகலின், “இமைப்பளவும்
துன்பம் ஒன்று இல்லாத“ என்றார், ஒருமாத்திரைப்போதும் எனினும் பொருந்தும்.

     அத்துணைச் சிறப்புடைய அமரர் வாழ்க்கையும் அழியுமியல்புடை யதேயன்றி நிலைத்த
தன்மையுடையதன்றென்க.

(950)

 
2061. பவணத்தார்க் 1கொருகடலா மிகையமரும் பல்லமொன்றாம்
இவணொத்த வமரருக்கு மிருவிசும்பிற் சுடரவர்க்கும்
சிவணொத்த வுயர்வாழ்நாள் 2சென்றபினர்ச் செல்கதியும்
3அவணொத்த தத்தமது விதிவகையா மதிபதியே.
 
     (இ - ள்.) பவணத்தார்க்கு ஒரு கடலாம் - தேவர்களுள் வைத்துப் பவணர்களுக்கு
வாழ்நாளின் சிற்றெல்லை ஒரு கடல் ஆகும், அமரும்மிகை - வதிதற்குரிய பேரெல்லை,
பல்லம் ஒன்றாம் - ஒருபல்லம் ஆகும், இவண் - இவ்விடத்தே, ஒத்த அமரருக்கும் -
இப்பவணரோடொத்த ஏனைய தேவர்க்கும், இருவிசும்பில் சுடரவார்க்கும் - பெரிய
விசும்பிலே ஒளிருகின்ற சோதிடர்க்கும், உயர் வாழ்நாள் சிவண் ஒத்த - உயர்ந்த வாழ்நாள்
அளவு மிகவும் அப்பவணர் வாழ்நாளோடு பொருந்தி ஒத்த அளவிற்றாம், சென்ற பினர் -
அவ் வாழ்நாள் கழிந்தபிறகு, செல்கதியும் - அவர்கள் அடுத்துப் பிறக்கும் பிறப்புக்களும்,
தத்தமது விதிவகை ஒத்த அவண் ஆம் - தத்தம் ஊழின் வகைக்குப் பொருந்திய அவ்வவ்
வுலகங்களிலே நிகழ்வதாம், அதிபதியே - அரசனே, (எ - று.)

     இது தேவர்களின் வாழ்நாளளவு கூறுகின்றது.

(951)

 

     (பாடம்) 1 கொருகடலும் மிகையமர். 2 சென்றபின். 3 இவணொத்த.