(இ - ள்.) இணர் - பூங்கொத்துக்களை; வேய்ந்து - தம் மேலே மிகுதியாகக்கொண்டு; ஒசிந்த சோலை - அந்தச் சுமையைத் தாங்கமாட்டாமல் துவளப்பெற்ற மரங்களையுடைய பொழில்; வேனிலான் வென்றி ஓகைதேந்துணர் கொடுப்ப - காமனது வெற்றிக்குக் காரணமான களிப்பை விளைவிக்கின்ற தேனையுடைய மலர்களைக் கொடுக்க; மூழ்கி - அம்மலர்களில் மூழ்கி; தேறல் வாய்நெகிழ மாந்தி - அவற்றிலுள்ள தேனைக் கடைவாய்வழியே வழியுமாறு மிகுதியாகக் குடித்து; தாந்துணர் துணையோடு ஆடி - தாம் அப்பூந்தாதுகளில் தம் வாழ்க்கைத் துணையான பெண்வண்டுகளுடனே விளையாடி; சாறு கொண்டு ஊறும் ஏர்ஆர் மாம்துணர் ஒசிய ஏறி - தேன் இடை விடாமற் சுரக்கப்பெற்ற அழகுபொருந்திய மாமரத்தின் பூங்கொத்துக்கள் முறியும்படி அவற்றின்மேலே மிகுதியாக ஏறியமர்ந்து; மணிவண்டு எல்லாம் - கருநிறமுள்ள வண்டுகளெல்லாம்; மதர்த்தன - களிப்பையடைந்தன, (எ - று.) வண்டுகள், மூழ்கி, மாந்தி, ஆடி, ஏறி, மதர்த்தன என்க. சித்திரை வைகாசி மாதங்களாகிய இளவேனிற்காலத்தே காமனுக்குப் போர்த் தொழிலில் ஊக்கமும் களிப்பும் உண்டாதல்பற்றி அவனுக்கு ‘வேனிலான்‘ என்று ஒரு பெயர் உண்டாயிற்று; வேனிற் பருவத்திற்கு உரியவன் என்க. |