பக்கம் : 1271
 

துறவி - துறந்தார்க்குரிய நெறி
உறவி - மெய்யுணர்ச்சி உறும் நெறி
மறவி - தீமை செய்தற்குரிய நெறி.
பிறவிச் சக்கரத்திற்பட்டு வருந்தி அதனை அஞ்சினவனே வீடுபேற்றிற்குரிய நெறியை நாடுவன் என்க.
 

( 3 )
 
2072. காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி
மாட்சியை 1வெலீஇமனந் தூய னாயபின்
நாட்செய்து நவிற்றிய தியான வீதியான்
மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே.
 
     (இ - ள்.) வீரனே - அரசனே!, காட்சியும் ஞானமும் கதிர்த்து - நற்காட்சியும்
நன்ஞானமும் தோன்றி வலிபெற்று, தன் பொறி மாட்சியை வெலீஇ - தன் பொறிகளின்
ஆற்றலை அடர்த்து வென்று அடக்கி, மனம் தூயன் ஆயபின் - நெஞ்சம் அவாவற்றுத்
தூயனாய பின்னர், நாட்செய்து நவிற்றிய தியான வீதியான் - நாள் முதலிய காலத்தால்
வரையறை செய்து கூறப்பட்ட தியானம் என்னும் வழியினாலே, மீட்சியில் விட்டுலகு எய்தும்
- பிறப்பின்கண் மீளுதல் இல்லாத வீட்டுலகை அடைவான், (எ - று.)

     பிறவிச் சக்கரத்திற் பட்டு வருந்தி அதிற் றப்ப முயல்வோன், நற்காட்சி நன்ஞானம்
முதலியவற்றாலே தன்பொறிகளை வென்று, மனம் தூய்மை யடைந்து தியானத்திலே பயின்று,
மீட்சியில்லாத அவ்வீட்டினை எய்துவன் என்க.
 

( 4 )

முத்திநிலை

2073. கடையிலெண் குணத்தது காம 2ராகர்கள்
இடைநனி யிலாத 3தில் லியற்கை யில்லது
மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள்
அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ
 
     (இ - ள்.) கடையில் எண்குணத்தது - கடையிலா ஞானம் முதலிய எண்குணங்களை
யுடையதும், காம ராகர்கள் இடை நனியிலாதது - காம விழைவுகள் ஒருசிறிதும் இல்லாததும்,
இல் இயற்கை இல்லது - இல்லறத்தினின்று எய்தும் தன்மை யில்லாததும், மிடையொடு
விழைவுவேர் - பற்றோடு அதற்குக் காரணமான அவாவினையும் வேரோடும், அறுத்த
வீரர்கள் - அறச்செய்த பேராண்மையுடையவர்கள், அடைவது - எய்துவது மாகிய, ஓர்
நிலை - ஒப்பற்ற நிலைமையை, பிறர்க்கு - அப் பேராண்மை யுடையாரல்லாத
மற்றையோர்க்கு, அறியல் - உணர்ந்து கோடலும், ஆகுமோ - எளிதாகுமோ, (எ - று.)
 

 


     (பாடம்) 1 மென்றகந். 2ராலர்கள். 3 திவ்வியற்கை.