பக்கம் : 1274
 

பயாபதி வேந்தன் தவம் ஆற்றுதற்கு உடன்பட்டவுடனே, அத்துறவி அரசனைப் பார்த்து,
“அங்ஙனமே செய்க! உன்னை மனைவி மக்கள் முதலிய உறவினராதல் அமைச்சர்
முதலியோர் ஆதல் தடைசெய்தல் தகாது என்று கூறவில்லை. ஏனெனில், இவ்வுலகம் தன்
பேதைமையால், ஒரு துறவி நம் மன்னனைக் கெடுத்தொழிந்தான் என்று பழிசுமத்தவும்
கூடும்; ஆதலால், அரசன் தானே துறத்தலே தகுதி“ என்று வாளாவிருந்தார். இஃது
அத்துறவியின் சால்புடைமையைக் காட்டுகிறது.
 

( 8 )
இதுவுமது
2077. இருட்பிலத் தரும்பட ரெய்திப் பலபுகழ்
வருட்டதை 1யிலனலிந் துண்ண வாழ்பவன்
பொருட்டகு 2வாயில்பெற் றுய்ந்து போம்வழி
உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ.
 
     (இ - ள்.) இருள் பிலத்து - இருள்மிக்க தமப்பிரபை என்னும் தீய நரகத்தில், அரும்
படர் எய்தி - பொறுத்தற்கு அரிய இன்னல் எய்தி, பல் புகழ்வு அருள் ததையிலன் -
பலவாகிய புகழையும் அருளின் செறிவையும் பெறாத மறலி, நலிந்துண்ண - தன்னை
வருத்தித் தின்னா நிற்ப, ஆழ்பவன் - முழுகிக்கிடக்கும் ஒருவன், பொருள் தகு வாயில்
பெற்று - மேலைப் புண்ணியப் பொருளாலே தக்கதொரு வழிகாணப்பெற்று, உய்ந்துபோம்
வழி அந்நரகத்தினின்றும் தப்பிச்செல்லும் போது, உருட்டுவான் ஒருவனை உவந்து நாடுமோ
- மீண்டும் தன்னை அந்நரகத்துள் உருட்டிவிடுகின்ற ஒருவனை விரும்பித் தேடுவானோ,
(எ - று.)

     ஈண்டு அரசனை நரகத்திற் கிடந்துழலும் உயிராகவும், பிறவித் துயரைக்
கூற்றுவனாகவும், துறவியின் அறவுரையை அந்நகரத்தினின்றும் உய்ந்து போதற்குரிய
வழியாகவும், அவ்வாறு உய்ந்துபோகும் போது மீண்டும் நரகத்திலே உருட்டிவிடுவோர்
அமைச்சர் முதலிய கேளிராகவும் கொள்க.
இருட்பிலம் - இருண்ட குகையுமாம்.
 

( 9 )

 

2078. அருஞ்சிறைப் பிணியுழந் தலைப்புண் டஞ்சுவான்
பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின்
கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு 3வெந்துயர்
தருஞ்சிறைக் களமது சென்று 4சாருமோ.
 
    

 


     (பாடம்) 1யிலனனிந். 2விரையில்பெற். 3வேந்துயர். 4சாருமே. சூ - 81