பக்கம் : 1276
 
பயாபதி தன் மக்கட்குச் செவியறிவுறுத்தல்
2080. எனவவர் மொழிதலு 1மெழுந்து போதியின்
சினைமல ரிலங்குவேற் 2சிறுவர் தங்களை
வனமலர்க் கண்ணியான் கூவி மற்றவர்க்
3கினலிலா னிவ்வுரை யெடுத்துச் செப்பினான்.

 
     (இ - ள்.) என அவர் மொழிதலும் - என்று அமைச்சர் கூறியவுடனே, எழுந்து -
அப்பொன் மண்டபத்தினின்றும் எழுந்து வேறிடத்தே சென்று, போதியின் சினைமலர்
இலங்கு வேல் சிறுவர் தங்களை - போதிமரத்தின் கிளைகளிலேயுள்ள இலைபோன்ற
இலையையுடைய மலராலே திகழும் வேற்படையேந்திய விசய திவிட்டர்களை, வனமலர்க்
கண்ணியான் - தாமரை மாலையை அணிந்த பயாபதி வேந்தன், கூவி - அழைத்து,
மற்றவர்க்கு - அம்மக்களுக்கு, இனல் இலான் - துன்பமில்லாதவனாய், இவ்வுரை -
இம்மொழிகளை, எடுத்துச் செப்பினான்-எடுத்துக் கூறுவானாயினான், (எ - று.)
இனலிலான் - துன்பமில்லாதவன்.

     பயாபதி வேந்தன் விசயதிவிட்டர்களின்பால் வைத்த ஆசையால், அவர்கட்கு உறுதி
கூற முற்படின் ‘அந்தோ இவர் யான் துறவியாகிய பின்னர், எத்தகைய துயரங்களுக்கு
ஆளாவரோ‘ என்பது போன்ற எண்ணங்களால் துன்புறுதல் திண்ணம், அங்ஙனமின்றி
எல்லா வுயிர் களிடத்தும் செல்லும் அருளுடைமையால் அவர்களுக்கும் அறங்கூறுகின்றான்
ஆகலின், மனத் துயரமில்லாதவனாய் நின்றே கூறினான், என்றார்.
 

( 12 )

 

2081. பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும்
அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி
உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம்
4தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே.
 
     (இ - ள்.) பொருள் இலார்க்கு - பொருள் இல்லாத நல்குரவாளர்க்கு, இவ்வழி -
இவ்வுலகத்தே, பொறியின் போகமும் - கண் முதலிய பொறிகளால் நுகரப்படும் காட்சி
முதலிய இன்பமும், அருள் இலார்க்கு - அருட்செல்வம் இல்லாத மாக்கட்கு, அறத்தின்
ஆம் பயனும் - அறச் செயலாலே உண்டாகும் பயனும், நூல்வழி - மெய்ந்நூல்களின் வழி,
உருள்விலா மனத்தவர்க்கு - பயிலுதலில்லாத மனத்தையுடைய எளியவர்க்கு, உணர்வும் -
அறிவும், இசைவில போல் - சேர்தல் இல்லையானாற் போன்று தெருள் இலார்க்கு - அறிவு
இலாதவர்க்கு, திருவின் செல்வி - திருமகள், இசைவிலள் - பொருந்துதல் இல்லை, (எ - று.)
 
 

     (பாடம்) 1 எழுந்த. 2 சிறுவன்மார்களை. 3 இயலணினவனுரை. 4 தெருள்விலார்க்கு, தெரிவிலார்க்.