பக்கம் : 1277
 

     “அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
     கிவ்வுலக மில்லாகி யாங்கு“
     “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
     னருளாதான் செய்யு மறம்“

என்னும் மெய்ம்மொழிகளை இதன் கருத்துடன் நோக்குக.

திருவின் செல்வி - செல்வம்.

     மாந்தர்க்கு “கற்றனைத் தூறும் அறிவி“ என்பவாகலின் கல்லாதார் அறிவிலர் என்றார்.
பெருஞ் செல்வம் உற்றவிடத்தும் அதனை நெறியறிந்து துய்த்தற்கும் அறிவு வேண்டும்.
அறிவு இல்லாதவர் “ என்னுடைய ரேனும் இலரா“ தல் பற்றித் “தெருளிலார்க்கத் திருவின்
செல்வி இசைவிலள்“ என்றார்.
 

( 13 )

பொருளின் இயல்பு

2082. திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேன்
மருவிய மனிதரை யிகந்து மற்றவள்
பொருவறு 1புகழினர் புதிய காமுறும்
ஒருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே.
 
     (இ - ள்.) திருமகள் நிலைமையும் - திருமகளின் தன்மையையும், செல்வர் - என்
அருமை மைந்தீர்!, கேட்டிரேல் - வினவுதிராயின், அவள் - அத்திருமகள், மருவிய
மனிதரை இகந்து - முன்னர்த் தன்னைக் காமுற்றுச் சேர்ந்த மனிதர்களை நீங்கி, பொருவறு
புகழினர் - ஒப்பற்ற புகழுடையர் பிறரை, புதிய காமுறும் - புதிதாக விழைந்து சேர்வள்,
ஒருவர்கண் உறவிலள் - அவள் தான் மருவிய ஒருவரிடத்தேனும் கேண்மை கொண்டு
நிற்பாளல்லள், உணர்ந்து கொண்மினே - இவ்வுண்மையை நன்கு அறிந்து கொள்ளுங்கோள்,
(எ - று.)

     “அற்கா வியல்பிற்றுச் செவ்ம் அதுபெற்றா
     லற்குப வாங்கே செயல்“
என்னும் மெய்ம்மொழியை நோக்குக. இதனாற் செல்வ நிலையாமை கூறப் பட்டது.
ஒருவர்கண் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது.
 

( 14 )


     (பாடம்) 1 புகழனிர்.