பக்கம் : 1278
 

 

2083. புண்ணிய முலர்ந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
எண்ணில ளிகந்திடும் யாவர் தம்மையும்
நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே.
 
     (இ - ள்.) பொருள் இலார்களை - கைப்பொருள் உலர்ந்து நல்கூர்ந்தாராயினாரை,
கண்ணிலர் துறந்திடும் - கண்ணோட்டம் இலராய் அகற்றி விடுகின்ற, கணிகை
மார்கள்போல் - வரைவின் மகளிரைப்போன்று, புண்ணியம் உலர்ந்தபின் - ஆகூழ்
கழிந்தவுடனே, எண்ணிலள் - அவர்தம் கேண்மையை நினையாதவளாய், இகந்திடும் -
நீங்கிப்போவாள், யாவர் தம்மையும் - எத்திறத்தாரிடத்தும், நண்ணிய நண்பு இலள் -
பொருந்திய அன்பு இல்லாதவள், நங்கை வண்ணம்-திருமகளின் தன்மை இஃதாம், (எ- று.)

     “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
     போக்கு மதுவிளிந் தற்று“

     பொருள் உலர்ந்தவுடனே கணிகையர் தம்மை மருவிய மைந்தரைப் புறக்கணித்து
விடுவது போன்று. திருமகளும் ஆகூழ் அகன்றவுடன் தன்னையுடையோரை ஒருவி
நீங்குவள் என்க.
 

( 15 )

 

2084. 1உற்றுநன் கொருவர்கண் ணிற்கு மாய்விடின்
மற்றவர் குணங்களை மறைத்து மாண்பிலாச்
செற்றமுஞ் சினங்களுஞ் செருக்குஞ் செய்திடும்
கற்றவர் தம்மையுங் கழற நோக்குமே.
 
     (இ - ள்.) உற்று நன்கு ஒருவர்கண் நிற்கும் ஆய்விடின் - ஒரோவழி பொருந்தித்
திண்ணிதின் ஒருவரிடத்து நிலைத்து விடுவாளாயினும், மற்று அவர் குணங்களை மறைத்து -
அவ்வழி அவர்தம் அன்பே அறனே ஈகையே வாய்மையே இன்னோரன்ன
நற்குணங்களையெல்லாம் அழித்தொழித்து, மாண்பிலா - மாட்சிமையில்லாத, செற்றமும் -
பகைமையும், சினங்களும் - வெகுளியும், செருக்கும் - செருக்குடைமையும், செய்திடும் -
இன்னோரன்ன தீக் குணங்களையே இறப்ப மிகுவிக்கும், கற்றவர் தம்மையும் - மெய்ந்நூற்
கல்வியுடைய சான்றோரையும், கழற - இடித்துரைக்க, நோக்குமே - நோக்குவிக்கும்,
(எ - று.)

     ஆய்விடினும் - என்னும் உம்மை செய்யுள் விகாரத்தாற் கெட்டது. இதனால்
ஒருவன்பால் பொருள் நிலைத்து நின்ற வழியும் அதனால் ஏற்படும் தீமை கூறப்பட்டது.
 

     (பாடம்) 1 உற்றுநின் றொருவர்கண்.