பக்கம் : 1281
 

 

  பின்னும்வந் தவரொடுஞ் சென்று பேர்ந்திலள்
இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே.
 
     (இ - ள்.) மூரித் தானையீர் - பெரிய படைகளையுடையீர், தன்னலம் - நிலமகளாகிய
தன்பால் உள நன்மைகளை, முன் நுகர்ந்து இகந்தவர் - சென்ற காலங்களிலே நுகர்ந்து
மாய்ந் தொழிந்தவர், தன் உயர் மணலினும் பலர்கள் - தன்பால் உயர்ந்துள்ள மணலினும்
எண்ணின் மிக்கவராகவும், பின்னும் - மேலும், வந்தவரொடும் - காலங்கடோறும் புதிது
புதிதாய்ப் பிறந்து வருகின்றவர்களோடும், சென்று - புணர்ந்து சென்று, இன்னும் -
இப்பொழுதும், பேர்ந்திலள் - அத்தன்மையினின்றும் மாறுபட்டாளில்லை, அஃது அவள்தன்
இயற்கை வண்ணம் - அங்ஙனம் ஆதல் அந்நிலமகட் கமைந்த இயற்கைக் குணமாம்,
(எ - று.)

“மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாத்துப்
பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்
பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின்
முன்னோர் செல்லவும் செல்லா தின்னும்
விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற
வுளனே வாழியர் யானெனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டென வுரைப்பரா லுணர்ந்தி சினோரே“ (புறம். 365)

என்னும் இச்செய்யுளை ஒப்புநோக்குக.
 

( 20 )

 

2089. வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும்
1உற்றதோ ருரிமைக ளில்லள் யாரொடும்
பற்றிலள் பற்றினார் பால ளன்னதால்
முற்றுநீர்த் துகிலுடை முதுபெண் ணீர்மையே.
 
     (இ - ள்.) வெற்றி வேல் மணிமுடி வேந்தர் தம்மொடும் - தன்னை யாண்டும்
காத்தோம்பும் உரிமையுடைய வெற்றிமிக்க வேல் ஏந்தும் அழகிய முடியையுடைய
அரசரிடத்தேயும், உற்றது ஓர் உரிமைகள் இல்லள் - பொருந்திய ஒரு சிறிது உரிமையேனும்
உடையவள் அல்லள், யாரொடும் பற்றிலள் - எத்தகையோரிடத்தும் கேண்மையுடையாளும்
அல்லள், பற்றினார் பாலள் - தன்னை வலிந்து பிடித்துக் கொள்வோர்மாட்டு வதிபவள்,
முற்றுநீர்த் துகிலுடை முது பெண் நீர்மை அன்னது - நிறைந்த நீரையுடைய கடலாகிய
ஆடையை உடுத்த முதிய நிலமடந்தையின் தன்மை அத்தகையதாம், ஏ, ஆல் : அசைகள்,
 
 

     (பாடம்) 1 மற்றதோ.