பக்கம் : 1282 | | முற்றுநீர் - வளைகடல் எனினுமாம். ஓர் என்பது ஈண்டு சிறுமை குறித்து நின்றது. “ஒருசில“ என்புழிப்போல, அசையெனினுமாம். முது பெண் என்ற குறிப்பால், நிலம் பண்டும் பண்டும் எண்ணிறந்தோராற் காதலிக்கப்பட்ட தென்றும் அவர்களிடத்தே நிலத்திற்குப் பற்றிலாமையால் அஃது, அவர்களை ஒரீஇப் புதியவர்பால் அடிக்கடி மாறுவதாய் மிகப் பழைமை யுடையதும் பலரால் நுகர்ந்துவிட்டதுமாகிய எச்சிலே என்றும் உணர்த்தப்பட்டன, கிழவி என்றிகழ்ந்தபடியுமாம். | ( 21 ) | | 2090. | அடிமிசை யரசர்கள் வணங்க வாண்டவன் பொடிமிசை யப்புறம் புரள விப்புறம் இடிமுர சதிரவொ ரிளவ றன்னொடு கடிபுகு மவளது கற்பின் வண்ணமே. | (இ - ள்.) அடிமிசை அரசர்கள் வணங்க ஆண்டவன் - தன் அடிகளில் மன்னர்பலர் வீழ்ந்து வணங்குமாறு தன்னை ஆட்சிசெய்த தன் தலைமகன், பொடிமிசை அப்புறம் புரள - மணலின்மேல் ஒருபக்கத்தே பிணமாகிப் புரண்டு கிடக்கும் பொழுதே, இப்புறம் - இன்னும் ஒரு பக்கத்தே, ஓர் இளவல் தன்னொடு - தன்னைப் புதுவதாகப்பற்றிய ஓர் இளமையுடைய தலைமகனோடே, இடிமுரசதிரக் கடிபுகும் - இடிபோன்று முரசம் முழங்காநிற்பத் திருமணம் புணர்வாள், அவளது கற்பின் வண்ணம் ஏ - அந்நிலமடந்தையின் கற்புடைமை இவ்வாறிருந்தது, (எ - று.) கற்பு என்றது இகழ்ச்சிக் குறிப்பு. தன்னொடு பொருந்தி நீண்ட நாள் இன்புற்ற கணவனாகிய அரசன் இறந்த பொழுதே ஒருசிறிதும் இரக்கமின்றி அயலானைச் சேர்ந்து மகிழும் வரைவின்மகள் நிலமகள் என்றபடி. | ( 22 ) | | 2091. | இன்னன விவடன தியற்கை யாதலால் அன்னவள் பொருளென வார்வஞ் செய்யன்மின் மன்னுயிர் காவனும் மக்க டாங்கினால் பின்னைநுங் கருமமே பேணற் பாலிரே. | (இ - ள்.) இன்னன இவள் தனது இயற்கை ஆதலால் - இவை இந்நிலமகளின் தன்மையாக இருந்தவாற்றால், அன்னவள் - அந்நிலமகளை, பொருள் என - உறுதிப் பொருளாகக் கருதி, ஆர்வம் செய்யன்மின் - விரும்பா தொழியுங்கோள், மன் உயிர் காவல் - உலகில் மன்னிய உயிரைக் காத்தற் றொழிலாகிய அரசியலை, நும்மக்கள் தாங்கினால் - உங்கள் மக்கள் தக்கபருவம் எய்தி ஏற்று நடத்துவாராயின், பின்னை நுங்கருமமே பேணற் பாலிர் ஏ - அதன்மேல் நீயிர் உங்கட்குச் சிறந்துரிமையுடைய தவத்தொழிலையே மேற்கொண்டு போற்றி ஒழுகுமின், (எ - று.) | | | |
|
|