பக்கம் : 1283
 

     “தவம் செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு“
என்பவாகலின், தவம் பேணுமின் என்பான் அதன் பெருமை தோன்ற
“நுங்க ருமமே பேணற் பாலிர்“ என்றான்.
பல பிறவிகளினும் தவத்தை விரும்பி அவ்வழி முயன்று அடிப்பட்டு வந்த உள்ளமுடையார்க்
கன்றிப் புதுவதாய்த் தவத்தை மேற்கொண்டு முற்றுவித்தல் இயலாதென்பவாகலின் நீயிர்
இப்பிறவியிலேயே தவ வொழுக்கத்திற்கு வித்திடுமின் என்றான் என்க.
 

( 23 )

 
2092. மீனிவர் விரிதிரை வேலி 1காவன்மேல்
ஊனிவர் வேலினீ ருங்கள் பாலதால்
யானினி யெனக்கர சாக்க லுற்றனன்
தேனிவ ரலங்கலீர் செவ்வி காண்மினே.
 
     (இ - ள்.) தேன்இவர் அலங்கலீர் - வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையை யுடையீர்,
ஊன் இவர் வேலினீர் - பகைவரது ஊன் ஒழுகப்பெற்ற வேற்படையை யுடையீர், மீன்
இவர்விரிதிரை வேலி காவலும் - மீன்கள் உலாவுகின்ற அகன்ற அலைகளையுடைய
கடலினைக் காப்பாகவுடைய உலகத்தை ஓம்பும் தொழிலும், உங்கள் பாலது ஆல் - உங்கள்
மேற்றாயிற்று, இனி யான் - இனி வயதுமுதிர்ந்த யானோ, எனக்கு அரசு ஆக்கலுற்றனன்
- யான் ஆள்தற்குரிய அரசியல் ஒன்றனைப் புதிதாகப் படைக்கத் தொடங்கியுள்ளேன்,
செவ்வி காண்மின் - அவ்வர சியலை ஆக்கத் தகுந்த பருவமும் இஃதே என்பதையும் உணர்க, (எ - று.)

     எனக்கு அரசு, என்றது, வீட்டுலக ஆட்சியை. நிலமகள் திருமகளிர் களின் நிலைமை
அவ்வாறு இழிந்ததே ஆயினும் மன்னர் குடிப்பிறந்த நுங்கள் கடமை மன்னுயிர்
இன்னலுறாதபடி செங்கோல் செலுத்தலே ஆகும். அகவையான் முதிர்ந்த யான் வீடுபேற்றின்
பொருட்டு முயல்வதே தகுதியாகும் என்றான் என்க.

     “எனக்கரசு ஆக்கலுற்றனன்“ என்னும் இத்தொடருடன், “புன் புலால், பொய்க்குடி
லோம்புவரோ போதத்தாற் றாம்வேய்ந்த புக்கில் குடிப் புகுதுவார்“ என்னும்
(நீதிநெறிவிளக்கம்) குமரகுருபரர் அருமைத் திருமொழியை ஒப்புக்காண்க.
 
 

     (பாடம்) 1 காவலும்.