பக்கம் : 1284
 

 

2093. உற்றநாள் 1சிலவுமக் கென்னொ டல்லது
மற்றநாள் பலவவை 2வருவ வாதலால்
கற்றமாண் 3சிந்தையீர் கவற்சி நீங்குமின்
இற்றையான் றுணிந்ததென் றிறைவன் செப்பினான்.
 
     (இ - ள்.) இற்றை யான் துணிந்தது - இச்செயல்களைச் செய்யவே யான் துணிந்தேன்,
கற்றமாண் சிந்தையீர் - மெய்ந்நூல்களை ஓதி மாட்சிமை யடைந்த உள்ளத்தையுடைய
என்மக்களே, உமக்கு என்னொடு உற்றநாள் சில அல்லது - உங்கட்கு என்னோடுடனுறையப்
பொருந்திய நாட்களும் ஒரு சிலவேயாதலன்றிப் பலவல்ல அவை கழிந்தன, மற்றநாள் பல -
என்னோ டுடனுறைதலில்லாத நாள்களே நுமக்குப் பலவாக உள்ளன, அவை வருவ -
அந்நாள்கள் இனிது உங்கட்கு நிகழாநிற்பன, ஆதலால் - இவ்வாறாதலால், கவற்சி நீங்குமின்
- நீயிர் என் பிரிவு குறித்துக் கவலாதே கொண்மின், என்று - என்றிவ்வாறு, இறைவன்
செப்பினான் - பயாபதிமன்னன் விசய திவிட்டர் களுக்குக் கூறினான், (எ - று.)

     அழிவற்ற உயிர்கள் ஒன்றோடொன்று உறவாகப் பிணிக்கப்படும் நாள்கள் ஒருசிலவே
ஆக, பிணிக்கப்படா நாள்களே அளவிறந்தன ஆகலான் “மற்றநாள் பல“ என்றான்.
“இரண்டுநாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா“ எனச் சச்சந்தன் தேவிக் குரைத்தமையும்
காண்க (சிந்தாமணி). இவையிற்றை ‘என்னும்‘ உருபேற்ற சுட்டுச்சொல் இடைக் குறைந்து.
இற்றை என நின்றது. இவையிற்றை என்பது நும்பால் அரசுரிமை வைத்தலும்
எனக்கரசாக்குதலும் ஆகிய இவையிற்றை என்றபடி.
 

( 25 )

 

2094. என்றலு மிளையவ ரிறைஞ்சிக் கைதொழு
தின்றியா மடிகளைப் பிழைத்த தென்னென
ஒன்றுநீ ரிலீரென வுரையொ ழிந்தரோ
அன்றவர்க் கயலவ னாகிச் செப்பினான்.
 
     (இ - ள்.) என்றலும் - என்று அரசன் கூறியவுடனே, இளையவர் கை தொழுது
இறைஞ்சி - இளமையுடைய விசய திவிட்டர்கள் கைகூப்பிக் கும்பிட்டு வணங்கி, இன்று யாம்
அடிகளைப் பிழைத்தது என் என - இப்பொழுது எளியேங்கள் அடிகளார்க்கு இயற்றிய
பிழை யாதோ என்று கூற, ஒன்றும் நீர் இலீர் என - ஒரு பிழையேனும் எமக்கு நீயிர்
செய்திலீர் என்று, அன்று அவர்க்கு அயலவன் ஆகி - அன்றே அம்மக்கட்குத் தான்
தந்தையாகாது பற்றுவிட்டு அயலான் ஆகி நின்று, உரையொழிந்து - வேறு பிறமொழிகளைப்
பேசுதலொழிந்து, செப்பினான் - விசயதிவிட்டர்கள் வினாவிற்கு விடைமாத்திரையே
இறுத்தான், அரோ : அசை, (எ - று.)
 

     (பாடம்) 1 சிலநுமக். 2 வருங்களா. 3 சினநகையீர்.