பக்கம் : 1289 | | | 2102. | காதல 1ராயினுங் காதல் கையிகந் தேதில 2ராயின மடிகட் கின்றென ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர் போதலர் கண்களும் புனல்ப டைத்தவே. | (இ - ள்.) காதலர் ஆயினும் - எளியேங்கள் காதல் கொள்ளற்குரிய மக்களாய் இருந்தேயும், காதல் கையிகந்து - அக்காதல் ஒழிக்கப்பட்டு, இன்று - இற்றைக்கு, அடிகட்கு - எம் தந்தைக்கு, ஏதிலராயினம் - அயலாராய் ஆகிவிட்டோம், என - என்று கூறி, ஊது உலை மெழுகின் - ஊதப்பட்ட கொல்லுலைத் தீயின் இட்ட மெழுகைப் போன்று, நின்று உருகினார் - நின்ற நிலையில் நின்றே உளம் உருகுவாராயினர், அவர் - அவர்களுடைய, போது அலர் கண்களும் - செந்தாமரை மலர்ந்தாலொத்த கண்களும், புனல் படைத்த - துயர் மிகுதியால் நீரைப் பெருக்கின, (எ - று.) தனது துறவுக்கோலத்தைக் கண்டு அலறி அழுகின்ற தம்பால் பரிவு காட்டாத பயாபதி எமக்கு இன்று தொடர்பில்லாத அயலார்களைப் போலவே ஆயினர் என்று கூறி விசயதிவிட்டர்கள் வருந்தினர் என்பதாம். | ( 34 ) | விசயதிவிட்டர்கள் பயாபதியைப் பிரிந்து போதல் | 2103. | முடிகெழு மன்னர்முன் னிறைஞ்ச நம்மைத்தம் கடிகம ழகலத்துக் கொண்ட 3காதலெம் அடிகளு மயலவர் போல வாயினார் கொடிதிது பெரிதெனக் குழைந்து போயினார். | (இ - ள்.) முடிகெழு மன்னர் முன் இறைஞ்ச - முடியணிந்த அரசர்கள் தமது அடிமுன்னர் வீழ்ந்து வணங்காநிற்ப, நம்மைத் தம் கடி கமழ் அகலத்துக் கொண்ட - நங்களைத் தமது நறுமணங்கமழும் மார்பிடத்தே பொருந்தத் தழீஇக் கொண்ட, காதல் எம் அடிகளும் - அளவிறந்த காதற் பெருக்குடைய எம்முடைய தந்தை தாமும், அயலவர் போல ஆயினார் - அன்புரிமை சிறிதுமில்லாத ஏதிலாரைப் போல மாறிவிட்டனர், இது பெரிது கொடிது - இச்செயல் பெரிதும் கொடிய தொன்றாயிருந்தது, எனக் குழைந்து போயினார் - என்று கூறி உள்ளம் நெகிழ்ந்து அவணின்றும் அகன்று செல்வாராயினர், (எ - று.) அன்புடமை சிறந்த பண்பாகவும், தம்மிடத்தே அன்பின்றி அயலார் போன்று பயாபதிமன்னன் இருத்தல் மிகக் கொடுமையே ஆகும் என்று கூறி அழுது விசயதிவிட்டர்கள் சென்றனர் என்க. | ( 35 ) |
| (பாடம்) 1 மாயினங். 2 மாயின. 3 காதலேம். | | |
|
|