பக்கம் : 1291
 

     பயாபதிக்கு அறவுரை கூறிய துறவியார், விசயதிவிட்டர்களை நோக்கி, ‘உங்கள் தந்தை,
மேற்கொண்டுள்ள செயல் அவர்க்கு மேலும் நன்மையே விளைவிக்கும் ஆதலின் இச்செயல்
தொடங்கியதற்குப் பெரிதும் மகிழவேண்டும், அப்படி இருக்கவும் நீங்கள் இவ்வண்ணம்
துயருறுதல் தகுதியாகாது‘ என்று கூறித் தேற்றினார் என்க.
 

( 37 )
விசயதிவிட்டர் முனிவரை வணங்குதல்
2106. அணங்குசா லடிகள தருள தாய்விடில்
பிணங்கிநாம் பிதற்றிய பேதை வாய்மொழி
குணங்கடா மல்லகோன் குறிப்பு மன்றென
வணங்கினார் மணிமுடி 1மான வீரரே.
 
     (இ - ள்.) அணங்குசால் அடிகளது அருள் அதாய் விடில் - அழகுநிறைந்த
அடிகளுடைய கருத்து அவ்வாறாயின், நாம் பிணங்கிப் பிதற்றிய பேதை வாய்மொழி - யாம்
அவர் கருத்தின் மாறுபட்டுப் பேசிய அறிவுக்குப் பொருந்தாத வாய் அளவானே அமைந்த
வெற்றுரைகள், குணங்கள்தாம் அல்ல - பண்புடையன வல்ல, கோன்குறிப்பும் அன்று -
அரசரின் திருவுளக்குறிப்புப் பொருத்தமும் அன்று, என - என்று கூறி, வணங்கினார் -
முனிவரைத் தொழுதார்கள், மணிமுடி மான வீரர் - மணிகளாலியன்ற முடியை அணிந்த
 மானம் போற்றும் வீரர்கள், (எ - று.)

தம் தந்தை துறந்தமை கொடுமை யென்று கூறிய விசயதிவிட்டர்கள், அவ்வாறு தாம்
கூறுவதற்குக் காரணம் தம்முடைய அறியாமையே என்றுணர்ந்து தம் தந்தை
தம்மொழிகளால் வருந்துவரோ என்று பரிவு கூர்ந்து முனிவரை வணங்கிச் சென்றனர்
என்பதாம்.
 

( 38 )

விசயதிவிட்டர்கள் நகரடைதல்

2107. திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம்
பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம்
எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய்
மருவுடை வளநகர் மன்னர் துன்னினார்.
 
     (இ - ள்.) திருவுடை அடிகள் தம் சிந்தைக்கு ஏதமாம் - வீட்டின்பமாகிய
செல்வமுடைய அடிகளாரின் திருவுளத்திற்குக் குற்றமாய்த் தோன்றும், நாம் பரிவொடு
பன்னிப் பயிற்றில் - யாம் எமக்குற்ற வருத்தத்தோடே பலபடப் பாரித்துப் பேசில், என்று -
என்று கருதி, தம் எரிவிடு சுடர் முடி இலங்கத் தாழ்ந்து - தம் ஒளி விட்டுச் சுடர்கின்ற முடி
திகழும்படி வணங்கி, போய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார் - சென்று மணமிக்க
தம் வளநகரத்தை அவ்வரசர்கள் அடைந்தனர், (எ - று.)

 


     (பாடம்) 1 மன்ன.