(இ - ள்.) வேல் படை விடுத்து - இவ்வுலகத்து அரசாட்சிக்குரிய வேற்படையை விட்டபின்னர்ப் பயாபதி வேந்தன், அவ்வரசதனைமேவி - வீட்டுலக அரசினை விரும்பி, நூல்படை - மெய்ந்நூல்களையே படைக்கலன்களாகவும், முனிவர் கண்ணா - துறவிகளே கண்போன்ற அமைச்சர்களாகவும், நோக்கிய நயத்தனாகி - தன் மனத்தாலே கருதிய நன்மையை யுடையவனாகி, விரதம் நோன்மை பாற்படு - விரதமும் ஒழுக்கங்களுமாகிய பகுதிகளையுடைய, ஐவர் - ஐவகைப் பேரொழுக்கங்கள் என்னும், படைப் பெருந்தலைவர் - படைத்தலைவர்களை, மேல் படை செய்யச் செல்லும் வினைவரை - தன்மேற் போர் செய்ய வருகின்ற ஞானாவரணீயம் முதலிய வினையாளர்களை, விலக்க வைத்தான் - தடுக்கும்படி நிறுத்தினன், (எ - று.) எனக்கரசு ஆக்கலுற்றனன் என முற்கூறலின் ஈண்டு அவ்வரசு என்று சுட்டினார். நூல் - மெய்ந்நூல். கண் என்றது கண் போன்ற அமைச்சரை. நோக்கம் - நோக்கனோக்கம் விரதம் - பஞ்சமகாவிரதங்கள். நோன்மை என்றது, உற்ற நோய் நோற்கும் ஆற்றலுடமையை. ஐவர் என்றது ஐவகை ஒழுக்கங்களை. அவையாவன : ஞானம் தரிசனம், சாரித்திரம், தவம் வீரியம் என்பன. விரதமும் நோன்மையும் இவற்றுள் அடங்குதலின் விரதம் நோன்மை பாற்படும் படைத்தலைவர் என மாற்றுக. வினைவர் என்றது, ஞானாவரணீயம் முதலிய காதி கன்மங்களை. படை செய்யச் செல்லும் என்புழி செலவுச் சொல் தன்மைக்கண் வந்தது “செலவு ......... அம்மூவிடத்தும் உரிய“ என்றமையால் அமைத்துக் கொள்க. (தொல். சொல் சூ - 28) |
(இ - ள்.) குணப்படை இலக்கம் எண்பான் நான்கு ஆயிரம் ஆகும் - எண்பத்து நான்கு நூறாயிரம் வகையவாகிய குணவிரதங்கள் என்னும் படைகளையும், சீலக் கணப்படை பதினெட்டாகும் ஆயிரம் - ஒழுக்க விரதத்தின் கூட்டமாகிய பதினெண்ணாயிரம் வகையவாகிய படைகளையும், கருவியாக - தனக்குத் துணைப்படையாக மேற்கொண்டு, பிறர்க்குத் துணைப் படைசெய்யும் - தன் பகைவராகிய வினைவருக்குத் துணைப் படையாய் வந்து உதவி செய்யாநின்ற, துன் நயத்து அளவும் நீக்கி - பொருந்திய மித்தியா நயத்தினது பெருக்கத்தையும் தவிர்த்து, மணப்பு உடைச் சிந்தை என்னும் தன்னொடு - மணத்தலையுடைய தியானம் என்னும், மடந்தையை - மகளை, செறிய வைத்தான் - நெருங்கும்படி காவலாக வைத்தான், (எ - று.) |