பக்கம் : 1294 | | துன்னயம் - மித்தியாநயம். சிந்தை - மனம். குணவிரதங்களின் விரி எண்பத்து நான்கு நூறாயிரம் என்றும், சீல விரதத்தின் விரி பதினெண்ணாயிரம் என்றும் கூறுப. இவற்றை விரிந்த நூல்களிற் கண்டுகொள்க. | ( 42 ) | | 2111. | செறிவெனப் படுவ மூன்று செழுமதில் செறியச் செய்து பொறியெனும் வாயி லைந்து பொற்கத வடைத்து மாற்றி அறிவமை சிந்தை 1யின்மாட் டகம்படி யுழைய ராக்கிக் கறையிலீ ரறுவர் நிற்ப விறைவராக் காக்க வைத்தான். | (இ - ள்.) செறிவு எனப் படுவ மூன்று செழுமதில் செறியச் செய்து - அடக்கம் என்னும் மனம் வாக்குக் காயங்களாலே மூன்றாகிய பெரிய மதில்களைத் திண்ணிதில் இயற்றி, பொறி எனும் வாயில் ஐந்தும் - பொறிகளாகிற ஐந்து வினைவரு வாயில்களையும், பொற்கதவு அடைத்து - இருப்புக் கதவுகளாலே மூடி, மாற்றி - அவற்றின் வழித் தியானமகள் புறம்போகாமற் றடைசெய்து, அறிவு அமை சிந்தையின்மாட்டு - அறிவோடு கூடிய அத் தியான மடந்தையின் பக்கலிலே, அகம்படி உழையர் ஆக்கி - அகத்துட் பணிசெய்யும் பணியாளர்களாய்ச் செய்து, கறையில் ஈர் அறுவர் நிற்ப - குற்றமற்ற அநுப்ரேக்ஷை என்னும் பன்னிருவரையும் நிற்கும்படி நிறுத்தி, இறைவராக் காக்க வைத்தான் - அவர் ஆண்டு எப்பொழுதும் தங்குதல் உடையராய் நின்று காவல் செய்யும்படி அமைத்தான், (எ - று.) மனம் வாக்கு காயமாகிய மூன்றையும் அடக்குதலால் செறிவெனப் படுவமூன்று செழுமதில் என்றார். செறிவு - வினைகள் உயிருடன் சேரவரும் வாயிலைத் தடுக்கும் அடக்கம். இதனைத் திரிகுப்தி என்ப. வாயில் - பொறிகள். ஈரறுவர் என்றது பன்னிரண்டு அநுப்ரேக்ஷைகளையும். அவையாவன:- 1. அநித்யம், 2. அசரணம், 3. சம்சாரம், 4. ஏகத்துவம், 5. அன்யத்துவம், 6. அசுசித்துவம், 7. ஆஸ்ரவம், 8. சம்வரை, 9. நிர்ச்சரை, 10. லோகம், 11. போதிதுர்லபம், 12. தரும சுவாக்கியானம்; என்பனவாம். இறைவர் - தங்குபவர். | ( 43 ) |
| (பாடம்) 1 யென்பா. | | |
|
|