பக்கம் : 1295
 

 

2112. படைகெழு புரிசை வெல்வார் புறநின்று பதின்மர் காக்க
விடையவர் தம்மு ளாரே யுழையரீ ரறுவ ராக
உடையதன் னுலக மூன்று மொருவழிப் படுக்க லுற்று
மிடைகெழு வினைவர் தானை மெலியமேற் சென்றுவிட்டான்.
 
     (இ - ள்.) படைகெழு புரிசை வெல்வார் - படைகள் செறிந்த மதில்களையுடைய
பகைவரை வெல்லும் ஆற்றலுடைய, பதின்மர் புறம் நின்று காக்க - உத்தமக்ஷமை முதலிய
பத்து அறவீரரும் வெளிப்புறத்தே நின்று காவல் செய்யவும், விடையவர் - காளைபோல்வர்,
தம் உளார் உழையர் ஈர் அறுவர் காக்க - தம்முள்ளேயே உள்ளிடத்தாரும்
வெளியிடத்தாருமாய் இருவகைப்பட்ட தவம் என்னும் பன்னிருவரும் துணையாக, உடைய
தன் உலகம் மூன்றும் ஒருவழிப்படுக்கலுற்று - தனக்கு உரியதாய் மூன்றுவகை
வேற்றுமையுடைய உலகங்கள் அனைத்தையும் ஒன்றுபடச் செய்யும் பொருட்டு, மிடைகெழு
வினைவர் தானை - மிக்குச் செறிந்த வினைப்பகைவர்களின் படை, மெலிய - மெலியுமாறு,
மேற்சென்று விட்டான் - தவப்போர் மேற்கொண்டான், (எ - று.)

     உத்தமக்ஷமை, உத்தமார்த்தவம், உத்தம ஆர்ஜவம், உத்தம சத்தியம், உத்தம
சௌசம், உத்தம சம்யமம், உத்தம தவம், உத்தம தியாகம், உத்தம ஆகிஞ்ஜின்யம், உத்தம
பிரமசரியம் என்னும் பத்து அறங்களும் காவலாக அமைய என்றபடி.
 

( 44 )

 

2113. பின்னணி யோகு நான்மை
     யபரகாத் 1திரம்பேற் றேனைத்
தன்னவ யவங்கண் முற்றித்
     தயங்குநூன் மனங்க ளோவா
துன்னிய திசையி னுய்க்கு
     முணர்வெனும் வயிரத் தோட்டி
இன்னியன் ஞான வேழத்
     தெழிலெருத் தேறி னானே.
 
     (இ - ள்.) பின் அணி - நால்வகைத் தியானங்களின் ஈற்றினின்ற அழகிய, யோகு
நான்மை அபரகாத்திரம் பெற்று - (பிருதக்துவ விதர்க்கவிசாரம், ஏகத்துவ விதர்க்க விசாரம்,
சூக்குமக் கிரியாபிரவிருத்தி, வியூபரதகிரியா நிவிருத்தி எனும்) சுக்லத் தியானத்தின்
கூறுபாடுகளின் கூட்டமாகிய நான்கு கால்களையுடையதாய், ஏனைத் தன் அவயவங்கள்முற்றி
- எஞ்சிய தன் உறுப்புக்களும் இலக்கணமுடையவாய் அமைந்த, இன் இயல் ஞானவேழத்து
- இனிய இயல்பமைந்த அறிவாகிய களிற்றினது, எழில் எருத்து - அழகிய பிடரின்கண்,
தயங்கு நூல் - திகழ்கின்ற மெய்ந்நூல்களால் உருப்பெற்றதும், மனங்கள் - பொறிகளை,
ஓவாது - ஒழியாமல், உன்னிய திசையின் உய்க்கும் - நினைத்த நெறியிலே செலுத்துவதும்
ஆகிய, உணர்வெனும் வயிரத் தோட்டி - மெய்யுணர்ச்சி என்னும் திண்ணிய
அங்குசத்தோடே, ஏறினான் ஏ - ஏறி யமர்ந்தான், (எ - று.)
 

     (பாடம்) 1 திரத்தோ டேனை.