பக்கம் : 1300 | | அனந்தஞான்மை விழுநிதி என்றது - கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம், கடையிலா வீரியம், என்னும் நான்கினையும் என்க. | ( 51 ) | பயாபதி கேவலமடந்தையை மணத்தல் | 2120. | நெடிதுட னாய தெவ்வர் நால்வரை நீறு செய்திட் டடிகள்பின் முடிவென் 1பாளை யகப்படுத் தனைய ராக இடிமுர சதிருந் தானை யரசரோ டிங்க ணீண்டிக் கடிகம ழமரர் வீரன் கடிவினை முடிவித் தாரே. | (இ - ள்.) நெடிது உடன் ஆய தெவ்வர் - நீண்டகாலமாகத் தன்னுடனே பகைத்துறைந்த பகைவர்களாகிய, நால்வரை நீறு செய்திட்டு - ஞானாவரணீயம் முதலிய காதிகர்மங்களாகிய நான்கு வீரர்களையும் சுட்டெரித்துத் துகளாக்கி, பின் - அதன் பின்னர், அடிகள் - பயாபதி அடிகளார், முடிவு என்பாளை - முடிபொருள் என்பவளாகிய கேவல ஞானத்தை, அகப்படுத்து - தன் வயப்படுத்திக்கொண்டு, அனையராக - அவ்வுயரிய நிலையினை உடையராகிவிட, அரசரோடும் - ஏனைய தவவேந்தர்களோடும், இடிமுரசதிரும் தானையோடு - இடி போன்று முரசங்கள் முழங்காநிற்கும் தம் படைகளோடும், இங்கண் ஈண்டி - இப்பயாபதி அடிகளார்பால் வந்து நெருங்கி, கடிகமழ் அமரர் - மணம்மிக்க தேவர்கள், வீரன் கடிவினை முடிவித்தார் - வீரனாகிய பயாபதி வேந்தற்குக் கேவலமடந்தையோடு உளதாகிய திருமண வினையை நிகழ்த்தினார், (எ - று.) “நெடி துடனாய தெவ்வர் நால்வர்“ என்றது முதற் செய்யுளிற் கூறிய “யீரிருவர்“ என்றதை அநுவதித்தபடியாம். கடிவினை என்றது மகாநிர்வாணத்தை. | ( 52 ) | இதுவுமது | 2121. | கொடிகளுங் குடையுங் கோலக் கவரியு மமரர் தங்கள் முடிகளு மடந்தை மாரு முகிழ்நகைக் 2கலங்க ளுஞ்செற் றடியிடு மிடமின் றாகி மூடியா காய மெல்லாம் கடிகமழ் மலருஞ் சாந்துஞ் சுண்ணமுங் கலந்த வன்றே. | (இ - ள்.) கொடிகளும் குடையும் கோலக் கவரியும் - கொடி குடை அழகிய சாமரை முதலியனவும், அமரர் தங்கள் முடிகளும் - தேவர்களுடைய முடியணிகலன்களும், மடந்தை மாரும் - தேவமகளிரும், முகிழ் நகைக் கலன்களும் - அவர் தம் ஒளி விடுகின்ற அணிகலன்களும், செற்று - செறிவுற்று, அடியிடும் இடமின்றாகி - அடியிடுதற்குத் தானும் இடமில்லாதபடி, மூடி - மூடப்பட்டு, ஆகாயம் எல்லாம் - விசும்பு முழுதும், கடிகமழ் மலரும் சாந்தும் - நறுமணங் கமழுகின்ற மலர்களும் சந்தனக் குழம்பு முதலியனவும், சுண்ணமும் - மணப் பொற் சுண்ணங்களும், கலந்த - நிறைந்தன, அன்றே : அசை, (எ - று.) | | | (பாடம்) 1 பானை. 2 கலங்கள் செற்றி. | | |
|
|