பக்கம் : 1303
 

 

2125. அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்.
 
     (இ - ள்.) அலகில் பெருங்குணத்தோன் - அளவிறந்த பெரிய குணம் உடைய
பயாபதி, ஆவரணம் நீக்கி - மதிஞானா வரணீயம் முதலிய மறைப்புகளை ஒருங்கே அகற்றி,
உலோகம் அலோகம் உடனே விழுங்கி - உலோகமும் அலோகமும் ஆகிய ஐந்து
அத்திகாயங்களையும் தனது மெய்யுணர்வானே விழுங்கி, புலவன் - நன்ஞானம் உடைய
பயாபதி, முடிவென்னும் - கேவலஞானம் என்னும், பூங்கொடியும் தானும், - பூங்கொம்பு
போல்வளாகிய திருமகளும் தானும் நிலவு சிவ கதியுள் - நிலைத்தலையுடைய வீட்டினுள்,
நீங்காது நின்றான் - பிரிவின்றி ஒன்றி நிற்பானாயினன், (எ - று.)
சீவாத்திகாயம், புத்தகலாத்திகாயம், தன்மாத்திகாயம், அதன்மாத்திகாயம், ஆகாயாத்திகாயம்
இவ்வைந்தும் மூலப்பொருளாம். காலத்தோடு கூட்ட, மூலப்பொருள் ஆறாம், இவற்றின்
கூட்டமே உலோகமாம், ஆகாயத்திகாயம் மட்டும் அலோகம் என்று சொல்லப்படும்.
 

( 57 )

தேவர்கள் தம்மிடத்திற் கேகல்
2126. இனையன பலபரவி யிறைஞ்சி யேத்தி யிமையவர்கள்
கனையெரி மிகுவேள்வி கலந்து செய்து களிப்பெய்தி
அனையவ 1ரறவாழி யமிர்த நீங்கா தகத்தாடிப்
புனையவிர் சுடரொளியார்ப் புகழ்ந்து தத்த மிடம்புக்கார்.
 
     (இ - ள்.) இனையன பலபரவி இறைஞ்சி ஏத்தி - இவ்வாறாய வாழ்த்துரைகள் பற்பல
கூறி வணங்கிப் புகழ்ந்து, இமையவர்கள் - அமரர்கள், கனை யெரி மிகுவேள்வி - ஒலிபட
எரிகின்ற தீ மிக்க வேள்விகளையும், கலந்து செய்து - கூடி இயற்றி, களிப்பு எய்தி -
மகிழ்ச்சி அடைந்து, அனையவர் - அத்தலைவன் தலைவியர்களின், அறவாழி அமிர்தம் - அறவுரைக் கடலின்கண் விளைந்த கேள்வி அமிழ்தமும், அகத்து நீங்காது ஆடி - தம்
முள்ளத்தே ஒழிவிலாதவாறு அயின்றாடி, புனையவிர் சுடர் ஒளியார் - ஒப்பனையாலே
விரிகின்ற சுடராகிய ஒளியையுடைய அத்தலைவன் தலைவியரை, புகழ்ந்து - பரவிப்
புகழ்ந்து, தத்தம் இடம் புக்கார் - தத்தமக்குரிய தேவர் நாட்டிலே செல்வாராயினர்,
(எ - று.)
 

     (பாடம்) 1 ரறவமிர்த.