(இ - ள்.) கோவை வண்டு ஊதுகின்ற - நிரைநிரையாக வண்டுகள் வந்து ஊதுதலைச் செய்கின்ற; குரவு எனும் - குரா மரம் என்கின்ற; குரை கொள்மாதர் - வண்டின் ஒலியைக் கொண்ட பெண்; பாவைகொண்டு ஆடுகின்ற பருவத்தே - முதற் பூப்பூத்து விளங்குகின்ற காலத்திலே; பயின்றகாமன் - இவளிடத்தே வந்துசேர்ந்த வண்டாகிய காதலன்; ஆவி கொண்டு - இக்குராமாதின் மணத்தைக்கொண்டு; இவளைக் கைவிட்டு அகலுமோ என்று - பிறகு இவளை முற்றிலும் விட்டு நீங்கிப் போவானோ என்று; பொழில்கள் எல்லாம் - சோலைகள் யாவும்; தம் தம் பூவையுங் கிளியுங்கொண்டு புலம்பின - தத்தமிடத்திலுள்ள நாகணவாய்ப் பறவைகளையும் கிளிகளையும் வாயாகக்கொண்டு புலம்பின. (எ - று.) சோலைகளிலே பூவைகிளி என்னும் பறவைகள் இயல்பாகப் பேசி யொலித்தலை, குராமரமாகிய பெண் முதற்பூப்புப் பூத்தகாலத்தே அப்பெண்ணினிடத்தில் வந்து சேர்ந்து பழகலான வண்டாகிய கணவன்: இவளாவியைக் கொண்டு பின்னர் இவளைக் கைவிட்டு நீங்கிவிடுவனோ என்று இரங்கிச் சோலைகள், பூவை கிளிகளின் குரலால் புலம்புகின்றன என்று கற்பித்தார். பூவை - கிளிபோலப் பேசும் ஒரு பறவை. குராமரத்தின் மலரைப் பாவை என்றல் வழக்கு. காமன் ஆவி கொண்டு என்னுமிடத்துக்0 காமன் இவளுடைய உயிரைக்கொண்டு என்று சிலேடைப் பொருளுந் தோன்றி நிற்கும் நயத்தைக் காண்க. காமன் - தலைவனுக்கு (வண்டுக்கு) உவமவாகு பெயர். இனி - கா + மன் சோலைக்கு மன்னன் என வண்டிற்குப் பெயராகவும் அமையும். பாவை கொண்டாடுகின்ற என்னுமிடத்தில்; பாவையைக் கொண்டு விளையாடுகின்ற என்னும் பொருளுந் தொனிக்கின்றது. குராமரம் ஆகிய பெண்ணுக்குப் பொழில்களைப் பெற்றோர்களாகக் கொள்க. |