அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் என்னும் பூம்பொழிலை யடைதல் |
168. | வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடுங் கயந்தலைக் களிறுந் தேரும் வையமுங் கவின வேறி நயந்தன னகரி னீங்கி மனோவன நண்ணி னானே. |
(இ - ள்.) மன்னவன் - சுவலனசடி யரசன்; வயந்தம் ஆங்கு உணர்த்தக் கேட்டு - வேனிற் காலத்தின் வரவை அவ்வாறு வயந்ததிலகை கூறக்கேட்டு; நயந்தனன் - பூம்பொழில் செல்வதற்கு விரும்பினான்; மக்களோடும் - தன் மகனாகிய அருக்ககீர்த்தி மகளாகிய சுயம்பிரபை ஆகியவர்களுடன்; உயர்ந்த தன் உரிமையோடும் - சிறப்பினையுடைய தன் உரிமைப் பெண்களுடனும்; உரிமைகாப்பவர்களோடும் - அவ்வுரிமைப் பெண்களுக்குப் பாதுகாப்பாகவுள்ள மெய்காவலர்களோடும்; கயந்தலை - யானைக் கன்று களின்மீதும்; களிறும் - ஆண்யானையின்மீதும்; தேரும் - தேரின்மீதும்; வையமும் - பல்லக்கின் மீதும்; கவினஏறி - அழகுண்டாக ஏறி; நகரின் நீங்கி - இரதநூபுர நகரத்தைவிட்டு அகன்று; மனோவனம் நண்ணினான் - நகர்ப் புறத்திலிருந்த மனோவனம் என்னும் பொழிலையடைந்தான். (எ - று.) வேனிற் பருவத்தின் வருகையை வயந்ததிலகையால் உணர்ந்த மன்னன். தன் உறவினர்களுடன் மனோவனம் என்னும் பொழிலை அடைந்தனன் என்க. சுவலனசடி சென்ற மனோவனத்தை ‘மநோகரம்‘ என்று ஸ்ரீபுராணம் கூறுகின்றது. |
( 50 ) |
வேறு அரசனைப் பொழில் வரவேற்றல் |
169. | கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித் தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற் றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே. |
(இ - ள்.) கோமான் சென்று அணைதலுமே - சுவலனசடி யரசன் அப்பொழிலைச் சென்று சேர்ந்த அளவிலே; அச்சோலையில் |