பக்கம் : 134
 
மாலம் - குங்கும மரங்கள்; புடைவாசம் கொள - மருங்கிலே மணங் கொள்ளுமாறு;
பூங்கவரி எடுத்தெறிய - தமது மலர்களாகிய சாமரங்களை யெடுத்துவீச; கோங்கம் -
கோங்கமரங்கள்; மா கம் குடை ஏந்தி என - பெரியவிண்ணி லளாவுகின்ற கடைகளை உயர
எடுத்தாற்போல; போது அவிழ்ந்தன - தமது மலர்கள் விரியப்பெற்றன. (எ - று.)

     அரசன் வருகையில் அப்பொழிலில் கொடிகள் தம் பூந்தாதுகளைச் சொரிதலை,
அவ்வரசன்மீது மகரந்தப்பொடி தூவிப் போற்றுவதாகவும், குங்கும மரங்கள் பூத்திருத்தலை
அவ்வரசனுக்குக் குடை பிடிப்பதாகவும் கற்பித்தார். சாமரத்தோடு குங்கும மலரும்
குடையோடு கோங்க மலரும் வடிவிலொக்கும். வனமல்லி என்னும் பாடத்திற்குக் காட்டு
மல்லிகை என்று பொருள் கொள்க. “கோங்கு பொற் குடை கொண்டு கவித்தன“ என்றார்,
யசோதர காவியத்தில்.
 

( 52 )

புகழ்பாடிப் பூவிறைத்தல்

171. கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
1அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
2கொடுவாய கிளிகோதிக் 3குளிர்நறும்போ துகுத்தனவே.
 

     (இ - ள்.) அணிவண்டு - அழகிய வண்டுகள்; கொடி ஆடும் நெடுநகரக்
கோமான்தன் குணம் பரவி அடிபாடும் அவர்கள் என - கொடிகள் அசையப்பெற்ற பெரிய
இரதநூபுர நகரத்தின் அரசனான சுவலனசடியினது குணங்களைப் போற்றி அவனுடைய
அடிகளைப் பாடுபவர்களைப்போல; முரன்றன - ஒலித்தன; கொடுவாய கிளி -
வளைந்தவாயையுடைய கிளிகள்; வடிவாய வேலவற்கு மலர்ச் சின்னஞ் சொரிவனபோல் -
வடித்த வாயினையுடைய வேற்படையையுடைய அரசனுக்கு விடுபூக்களைச் சொரிபவைபோல;
குளிர் நறும் போது கோதி உகுத்தன - தண்ணிய நறுமணமுள்ளமலர்களைக் கொத்திச்
சிந்தின. (எ - று.)

 


     (பாடம்) 1. அடிபாடு மலர்களா யணிவண்டு. 2. கொடிவாய்.3. குளிரம்போ
துகுத்தனவே; குளிர்போது குடைந்தனவே.