பக்கம் : 135
 
     அவ்வரசன் வருகின்ற சமயத்தில் அப்பொழிலில் வண்டுகள் ரீங்காரஞ் செய்தலை,
அவ்வரசன் குணங்களைப் புகழ்ந்து பாடுவதாகவும், கிளிகள் மலர்களை வாயலகாற்கோதி
உதிர்த்தலை அவ்வரசன் மீது விடுபூச் சிந்துவதாகவும் கற்பித்தார். விடுபூ - மாலையாகத்
தொடுக்கப்படாத தனிப்பூ. கொடிவாய என்னும் பாடத்திற்குச் சிறிய வாயினையுடைய என்று
பொருள் கொள்க. கொடி - சிறுமை.
 

( 53 )

தென்றல் வீசுதல்

172. 1குரவகத்துக் குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
2தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
3புரவலன்றன் றிருமுடிமேற் 4போதலர வசைத்ததே.
 

     (இ - ள்.) குரவு அகத்துக் குடைந்து ஆடி - குராமரத்தின் மலர்களிலே
பொருந்தியுள்ள தேனிற்குடைந்து நீராடி; அரவம் வண்டு ஆர்த்து இன் இசைபாடக் குளிர்
நறவம் கொப்பளித்து - பேரொலி செய்தலையுடைய வண்டுகள் நிறைய மொய்த்து
இனிமையான இசையைப் பாடும்படி குளிர்ச்சியான அம்மலர்த் தேனை யுமிழ்ந்து; அருவிநீர்
அளைந்து - மலையருவி நீரிலே படிந்து; உராய் - பெயர்ந்து; விரைமலர்ந்த துணர் வீசி -
மணம்பரவுகின்ற பூங்கொத்துக்களைத் தூவி; விரைஞாற வருதென்றல் - நறுமணம் வீசுமாறு
வருகின்ற தென்றற் காற்றானது; புரவலன்தன் திருமுடிமேல் - சுவலனசடி மன்னனது
அழகிய முடியின்மேல்; போது அலர அசைத்தது - அணிந்துள்ள மலரும் பருவத்
தரும்புகள் மலரும்படியாக வீசியது. (எ - று.)

     அரசன் அங்கு வருகையில் தென்றற்காற்று இனிதாக வீசுதலை, அவன் முடியிற் சூடிய
மலரும் பருவத் தரும்புகள் மலரும்படி ஆல வட்டம் கொண்டு விசிறுவதாகக் கற்பித்தார்.
மனிதனது செய்கைகள் தோன்றுமாறு, குடைந்தாடி, நறவங் கொப்பளித்து, நீரளைந்து, உராய்
துணர்வீசி விரைஞாற வருதென்ற லென்றார். உராய் - உலாவி; உலாவு என்னும்
பகுதியின்மேற் பிறந்த இறந்த கால வினையெச்சம். நறவம் - நறா என்னும் குறியதன் கீழ்
ஆகாரம் குறுகி அம் சாரியை பெற்றது. ஞாற - நாற; முதற் போலி. தென்றல் -
தெற்கிலிருந்து வருங்காற்று.

( 54 )


     (பாடம்) 1. குரவகங். 2. அரவ வண்டிசை பாட 3. புரவலன் றிருமுடி மேல். 4.
போதெலா மசைந்ததே.