(இ -ள்.) புரியணிந்த குழலீர் - நெறிப்பமைந்த கூந்தலையுடைய பெண்களே!; எரி அணிந்த இளம்பிண்டி இணர் ஆர்ந்த இடம் எல்லாம் - தீயைப்போன்ற இளமையான அசோகமரத்தின் தளிர்கள் நிறைந்த இடங்களெல்லாவற்றினும்; பொரி அணிந்த புன்கு பூ உதிர்ந்து நாறும் துறை எல்லாம் - நெற்பொரியைப்போன்ற அழகினையுடையதாய்ப் புன்கமரத்தின் மலர்கள் சிந்தி மணம் வீசப்பெறும் இடங்களிலெல்லாம்; வரி அணிந்து வண்டு ஊத - இசைப்பாட்டோடு பொருந்தி வண்டுகள் ரீங்காரஞ்செய்ய; வளர்கின்ற இளவேனில் - சிறப்புடையதாக விளங்குகின்ற இவ்விளவேனிற் பருவமானது; நும் செல்வம் போல் பொலிந்தது - உங்களுடைய பெண்மை நலம்போலச் சிறப்புடையதாக விளங்குகின்றது. (எ - று.) இளவேனிற் பருவம் உங்களுடைய இன்ப நலத்தைப்போல இன்பஞ்செய்து நிற்கின்ற தென்பான் “நுஞ்செல்வம்போற் பொலிந்ததே“ என்றான். இணர் பூங்கொத்து எனினுமாம். புன்கின் பூக்களை நெற்பொரியோடு நூலாசிரியர்கள் பலரும் ஒப்பிட்டுரைப்பர். அவ்வுவமை நயம் போற்றத்தக்கது. ‘புரியணிந்த குழலீர்‘ என்பதற்குப் பின்னியழகு செய்யப்பட்ட கூந்தலையுடையீர் என்றும் பொருள் கூறலாம். |
( 56 ) |
கைகளும் இடைகளும் |
175. | காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச் சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே வாரணிந்த முலையீர்நும் 1மருங்குறனின் வகைநோக்கி ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே. |
(இ - ள்.) கார் அணிந்த குழலீர்! - முகில்போன்ற கூந்தலையுடைய நங்கையீர்!; சீர் அணிந்த செழும்பிண்டி - சிறப்புப் பொருந்திய செழித்த அசோகமரங்களானவை; நும் கைத் தலங்கள் தகை நோக்கி - உங்களுடைய கைகளின் அழகைப் பார்த்து; தளிர் ஈன்று திகழ்ந்தன - தாம் தளிர்களைவிட்டுத் திகழலாயின; வார் அணிந்த முலையீர்! - கச்சணியப்பெற்ற கொங்கைகளையுடையீர்!; ஏர் அணிந்த குருக்கத்தி - அழகு பொருந்திய குருக்கத்திக் கொடிகளானவை; நும் மருங்குல் தனின் வகை நோக்கி - உங்களுடைய இடையின் அழகைப் பார்த்து; இளங்கொடித்தாய் ஈன்றன - இளங்கொடிகளை மேலும் மேலும் பெறலாயின. (எ - று.) |
|
|
(பாடம்) 1 மருங்கிலின்; மருங்குலின்; மருங்கிலின. |