(இ - ள்.) தேன் தளங்கு குழலீர் - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலை யுடையவர்களே!; இங்கு - இச்சோலையில்; மாந்தளிர் இவை - இந்த மாமரத்தின் தளிர்களானவை; நுமது நிறங்கொண்டு வளர்ந்தன - உங்களுடைய உடல்நிற அழகைத் தாம்பெற்று வளர்ந்திருக்கின்றன; ஏந்து இளந் தீங்குயில் இவை - சிறந்த இளமையான இனிய குரலையுடைய இக்குயில்கள்; நும் சொல் கற்பான் இசைந்தன - உங்களுடைய சொற்களின் இனிமையைக் கற்றுக்கொள்வதற்காக இங்குவந்து பொருந்தியுள்ளன; தளிர்மெல் முருக்கு - தளிரினையுடைய மெல்லிய பலாச மரங்களானவை; நும் செவ்வாயின் எழில் நோக்கி - இயற்கையாகவே சிவந்துள்ள உங்களுடைய சிவந்த வாயின் அழகைப் பார்த்து; தாம் - தாமும்; இனிய தாதோடு ததைந்தன - இனிமைமிக்க மலர்களுடன் நிறைந்துள்ளன. (எ - று.) இதனால் அரசன் மாந்தளிர் நிறத்தினும் நுமது மேனிநிறம் சிறந்ததென்றும், குயிலின் குரலினும் நுமது குரல் இனியதென்றும், முருக்கு மலரினும் நுமது வாயிதழ் சிவந்ததென்றும் தன் மனைவியரின் நலத்தைப் பாராட்டினான். தளங்கு - தழங்கு என்பதன் போலி. |