(இ - ள்.) பிணிநிலை பெயர்ப்பன - தன்னையடைந்தார்களது உடற்பிணியைக் கெடுப்பனவும்; பிறவி தீர்ப்பன - அவர்களது பிறப்பை யொழிப்பனவும்; மணிநிலை விசும்பொடு வரங்கள் ஈவன - அழகிய தன்மையையுடைய விண்ணுலகப் பேற்றோடு வேண்டும் வரங்களைக் கொடுப்பனவுமான; கணிநிலை இலாத் திறல் - அளவு செய்தற்கு எல்லை யில்லாத ஆற்றல்களையுடைய; கடவுள் தானகம் - அவ்வருகக் கடவுளின் இருப்பிடத்தில்; மணிநிலைச் சுடர் ஒளி - மாணிக்கத்தின் தன்மையையுடைய விளங்குகின்ற ஒளி; மலர்ந்து தோன்ற - பரந்து காணப்பட. (எ - று.) உடற்பிணியைப் போக்கல், பிறவிப்பிணியை நீக்கல், விண்ணுலகப் பேற்றையும் வேண்டும் மேன்மைகளையும் கொடுத்தல் முதலிய சிறப்புக்களை யுடைய திருக்கோயிலில் மணிநிலைச் சுடரொளி பரந்து காணப்பட, அவ்வொளியையுடைய கடவுளை அரசன் வணங்கத் தொடங்குகிறான். |