பக்கம் : 143
 

     இயற்கையொளியும் இயற்கையழகும் உடைய கடவுள் என்பார். “அணியாதும்
ஒளிதிகழும் ஆரணங்கு திருமூர்த்தி“ என்றார். திகம்பரிகளென்றும் சுவேதாம்பரிகள்
என்றுங் கூறப்படுகிற சைனசமய வகுப்பினர் இருவருள், திகம்பரிகள் தமது கடவுளுக்கு
ஆடையணிகளை அணிவதில்லை. அநந்த ஞாநம் எனப்பெறும் வரம்பிலா அறிவினால்
இயற்கையாகவே எல்லாப் பொருள்களையும் அறிந்த முழுமுதற் கடவுள் என்று பல நூல்கள்
உன்னைக் கூறுகின்றன; அவ்வாறு கூறினாலும் உலகம் முழுவதையும் தனக்கு
உரிமையாகவுடைய நின்னை அறியக் கூடியவர் ஒருவரும் இல்லை யென்றான்.

( 64 )

படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றது

183. பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்தி
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறைந்தாலும்
அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே.
 
     (இ - ள்.) பகைநாறும் - பகைமைக் குணந்தோன்றுகின்ற; அயிற்படைகள் - கூரிய
படைக்கலங்கள்; பயிலாத திருமூர்த்தி - அமையப் பெறாத அழகிய
வடிவத்தையுடையவனே!; இகல்மாற வென்று உயர்ந்த இறைவன் என்று அறையும் -
பகைகளெல்லாம் ஒழியும்படி வெற்றிகொண்டு மேம்பட்ட கடவுள் என்று நூல்கள் உன்னைக்
கூறும்; இகல்மாறவென்று உயர்ந்த இறைவன் என்று அறைந்தாலும் - பகைகளெல்லாம்
ஒழியும்படி வெற்றிகொண்டு மேம்பட்ட கடவுள் என்று நூல்கள் போற்றினாலும்; அகல்
ஞாலம் உடையாயை - பரந்த உலகம் முழுவதையும் உரிமையாகவுடைய நின்னை;
அறிவாரோ அரியர் - உள்ளபடியாக வுணர்பவரோ உலகத்தில் மிகவும்
அருமையானவராவர். (எ - று.)

     பிற தெய்வங்களைப்போல உயிர்களைக் கொல்லும் கொடிய பல வகைப்
படைக்கலங்களைக்கொண்டு அஞ்சத் தக்கவாறு காட்சியளிக் காதவன் அருகக் கடவுள்
என்பார், “பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்தி“ என்றார். அற வாழியாகிய
தரும சக்கரத்தை அருகக் கடவுள் கையிற் கொண்டிருத்தல் அருளாழி யாதலின்
அதனைப் படைக்கலமாகக் கொள்ளுதல் பொருந்தாது. வரம்பிலா ஆற்றலையுடைய
கடவுளுக்கு அகப் பகையையும் புறப்பகையையும் வெல்லுதல் அரிய செயலன்று.
 

( 65 )