(இ - ள்.) முருகு அணங்கு தாமரையின் மொய்ம் மலர்மேற் சென்றாய் - மணத்தையுந் தெய்வத் தன்மையையுமுடைய தாமரையின் நெருங்கிய இதழ்களையுடைய மலர்மேல் நடந்தருளினாய்; அருகு அணங்கி ஏத்தியது - யாம்நின் அருகில் அடைந்து போற்றியதை; மகிழ்வாய் இல்லை - மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வோயல்லை; அது மகிழ்வாய் அல்லை எனினும் - நீ அப்போற்றுதலுக்காக மகிழ்வோய் அல்லை என்றாலும்; பெயராக்கதி மகிழ நின்றாய்கண் - நின்னடியார்கள் மற்றீண்டு வாராநெறி அமர்ந்து மகிழும் படி நின்ற நின்னிடத்திலே; காதல் ஒழியோம் - நாங்கள் அன்பு நீங்க மாட்டோம், (எ - று.) முருகு, - மணத்தையே அன்றி அழகையும் தேனையும் உணர்த்தும். அணங்கி என்பதற்குச் சேர்ந்து என்று பொருள் உரைக்கப்பட்டது. அணங்கி அருகு ஏத்தி என்று மொழிமாற்றி; வருத்தமுற்று உனது அண்மையிலடைந்து போற்ற என்று உரைப்பினுமாம். |