(இ - ள்.) குணக்குன்று ஆயினார் - நற்குணங்களால் மலைபோல் உயர்ந்தவர்களாகிய அந்தச் சமண முனிவர்கள்; இறைவனை இன்னணம் ஏத்தி - கடவுளை இவ்வாறு வழிபட்டு; தம்தொழில் குறைவு இலா முடிந்த பின் - தாங்கள் செய்ய வேண்டியசெயல் குறைவற முடிந்தபின்பு; மறம்மலி மன்னனை நோக்கி - வலிமைமிக்க அந்தச் சுவலனசடியரசனைப் பார்த்து, அவற்கு அறம்மழை பொழிவது ஓர் ஆர்வம் எய்தினார் - அவ்வரசனுக்குத் தாங்கள் அறவுரைபகர்தல் வேண்டுமென்பதான ஒப்பற்ற விருப்பத்தை யடைந்தார்கள், (எ - று.) மற்று - அசை; வினைமாற்றுமாம். எல்லாக் குணங்களாலும் சிறந்து உயர்ந்துள்ள சமணமுனிவர்களைக் “குணக்குன்றாயினார்“ என்றார். திருவள்ளுவர், “குணமென்னுங் குன்றேறி நின்றார்“ என்றார். மறமலி மன்னனுக்கு அறமழை பொழியின், அதனால் அவ்வரசனேயன்றி உலகத்துயிர்களும் இன்பத்தையடையும். ஆகவே சமண முனிவர்கள் அரசனுக்கு அறமழை பொழியும் ஆர்வத்தினை அடைந்தனர். முனிவர்கள் தந்தொழிலைக் குறைவிலாமல் முடித்துக் கொண்டதாகக் கூறியது, அருகக்கடவுளைப் புகழ்தல், வணங்குதல், மலர்கொண்டு போற்றுதல் முதலியவைகளை என்க. |