பக்கம் : 152
 
என்று கூறியருளுதலும், ஏசு இடை இலாதவன் - குற்றமில்லாதவனான அரசன்; தூசுடை
மணிக்கலை மகளிர் சூழ்தர - அரையிலுடுத்த வுடையைச் சூழ்ந்ததான மணிகள் பதித்துச்
செய்யப்பட்ட மேகலையை உடைய தன்மனைவியர் தன்னைச் சூழ்ந்திருக்க; இருக்கை
எய்தினான் - தான் அமர்ந்திருக்கலானான், (எ - று.)

     முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி இருக்குமாறு பணித்தார்கள். பெண்கள்
தன்னைச் சூழ்ந்திருக்க அரசன் அமர்ந்தனன். இருக்கவியங்கோள். “இருக்கை யெய்தினான்“
அரசன் தான் அமர்ந்திருக்கத் தக்க இடத்தை யடைந்து அமர்ந்தான். பாசிடை - பசுமை
இடை; பண்புப் பகுதி ஈறுபோய் ஆதிநீண்டது. ஆசிடை கொடுத்து - ஆசீர்வதித்து, ஏசு
இடை இலாதவன் - பழித்தற்கு இடமில்லாதவன். ஈற்றடி முற்றும் மோனையாக
அமைந்துள்ளது.
 

( 76 )

வேறு
வரிப்பாட்டு


முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன்
வணங்குதல்

195. தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ 1வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்.
 

     (இ - ள்.) தாளுயர் தாமரைத் திருவும் - தண்டினால் உயர்ந்த செந்தாமரை மலரில்
வாழ்கின்ற திருமகளும், தண்கதிர் நீள்எழில் ஆரமும் - குளிர்ந்த ஒளிகளையுடைய
திங்கள்போல விளங்குகின்ற அழகிய முத்துமாலையும், நிழன்ற - தங்கிவிளங்கப்பெற்ற;
கண்குலாம் தோள்இணை - காண்போரின்கண்கள் மகிழ்தற்குக் காரணமான அழகிய
உன்தோள்கள் இரண்டும், செவ்வியோ என்ன - நன்மையாக இருக்கின்றனவோவென்று
கேட்க, சூழ்ஒளிவாளவன் - சுற்றிலும் ஒளிவீசுகின்ற வாட்படையையுடைய சுவலனசடியரசன்,
மணிமுடி வணங்கிவாழ்த்தினான் - தனது அழகிய தலையால் வணங்கி முனிவர்களைப்
போற்றினான், (எ - று.)

 


     (பாடம்) 1. வென்று.