(இ - ள்.) முனிவருள் பெரியவன் முகத்துநோக்கி - அச்சமண முனிவர்களிருவரிற் பெரியவனாக உள்ளோனது முகத்தைப் பார்த்து, அடிகள் - அடிகளே!, இனிது உணர்த்துவது ஒன்று உளது - இனிமையாக அடியேன் தெரிவிக்க வேண்டியது ஒன்று இருக்கின்றது, என்றலும் - என்று சுவலன சடியரசன் கூறுதலும், பனிமலர்த் தாமரைப் பழனநாடனை - குளிர்ந்த தாமரை மலர்களையுடைய கழனிகள் சூழ்ந்த நாட்டை யுடையனாகிய அரசனைப் பார்த்து, கடவுள் - அம்முனிவன், கனிய - அன்பினால் மனம் நெகிழ, இன்னணம் கூறினான் - இவ்வாறு சொல்வானானான், (எ - று.) மற்று: அசை. அரசன் முனிவர்களிற் பெரியவனாக உள்ளவனுடைய முகத்தைப் பார்த்து, “அடியேன் தெரிவித்துக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது“ என்று கூறினான். முனிவர்களோ முக்காலமும் உணர்ந்தவர்களாதலின் அரசன் தெரிவித்துக்கொள்ள விரும்புவதை உணர்ந்தவர்களாய் அரசன் மனக் கருத்தைத் தாமே அவனிடங் கூறுவாராய் அதனை வருஞ் செய்யுளால் அரசனுக்குக் கூறுகின்றனர் என்க. கடவுள் என்றது ஈண்டுக் கடவுள் போன்ற தன்மையுடையவனாகிய முனிவனை உணர்த்தி நின்றது. |