(இ - ள்.) நெய்உற - நெய்பூசப்பெற்று, நிழற்றும் வேலோய் - ஒளிவீசுகின்ற வேற்படையையுடைய அரசனே!, வெய்ய - கொடிய, கையறு வினைகள் - செயலற்று வருந்துதற்குக் காரணமான கருமங்கள், மெய்அறிவு இலாமை என்னும் வித்தினிற் பிறந்து - உண்மையுணர் வில்லாமை யென்கிற விதையினின்று உண்டாகி, கைபோய் - விடாது தொடர்ந்து. கடுதுயர் விளைத்த போழ்தின் - கொடிய துன்பத்தை யுண்டாக்கியபொழுது, மையுற வுழந்து வாடும் - மயக்கமுண்டாக அதனை நுகர்ந்து வருந்தும், வாழுயிர்ப் பிறவிமாலை - உடலோடு கூடிவாழுமியல்புள்ள உயிர்ப்பிறப்புக்களின் வரிசை, இனைத்துஎன நினைக்கல் ஆமோ - இவ்வளவினதென்று எண்ணுதற்கு இயலுமோ? (எ - று.) தீமையான காரியங்கள் பேதைமையினின்று தோன்றித் தொடர்ந்து கொடுந்துன்பத்தைச் செய்யும்போது, அவற்றை நீக்க மாட்டாமல், அவ்வூழ்வினைக்கு உட்பட்டு, அவ்வினைப்பயனை நுகர்ந்து வருந்தக் கடவனவான உயிர்கட்கு, அவ்வினைப் பயனால் நேரும் பிறப்புக்கள் இவ்வளவு என்று எண்ணி அளவிடற்கரியன என்பதாம். மெய்யறிவாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் மாறுபாடும் ஐயமும் இல்லாமல் உண்மையாக உணர்தல். இதனைத் தத்துவஞானம் என்பர் வடநூலார். மெய்யறிவிலாமை பேதைமை என்று கூறப்படும். பேதைமையே பிறவிக்கு மூலகாரணமாகும். மெய்யறிவில்லாமையாகிய பேதைமையே காமவெகுளிகட்குக் காரணமாய்க் கருமங்களை விளைத்தலால் “மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து, வெய்ய கையறுவினைகள்“ என்னப் பட்டது. கையறுதல் - செயலற்றுப் போதல்; மயங்கித் திகைத்தல். |