(இ - ள்.) அளிஅற்ற அறிவில்சாதி - உயிர்களிடத்திலே இரக்கமும் மெய்யறிவுமில்லாத பலவகைப் பிறப்பின் பாற்பட்ட உயிர்கள், சூழ்வினை துரப்பச்சென்று - விடாது தொடர்ந்து வளைந்திடுந் தன்மையுள்ள தம் பழவினை செலுத்துதலால் ஒரு பிறப்பிற் சென்று பிறந்து, சூழ்வினைப் பயத்தினாலே - விடாது பற்றுகின்ற கருமத்தின் பயனால், வீழ்வினைபிறிதும் ஆக்கி - அப்பிறவியிலும் இழிவான வேறு சில செயல்களைச் செய்து, வெய்துற விளிந்துதோன்றி - கொடிய அச்செயல் பொருந்துதலால் இறந்து மறுபிறப்பெடுத்து, தாழ்வினை விலக்கும் சார்வு தலைப் படா அளவும் - இழிவான செயல்களை விலக்கும்படியான பற்றுக்கோடு எய்தாதவரையிலும், ஆழ்துயர் உழக்கும் - ஆழ்ந்த துன்பத்தை நுகரும், அந்தோ என்றான் - ஐயோ என்று பெரிய முனிவர் திருவாய் மலர்ந்தருளினார், (எ - று.) மெய்யறிவு பெறாததும் அதனால் உயிர்களிடத்தில் இரக்கமில்லாதது வுமான பிறப்பு வகையில் அகப்பட்ட உயிர், தனது கருமத்தை யொழிப் பதற்குத் துணைமை நேரிடாதவரையில், தனது கருமத்தினால் ஒருபிறப்பிற் பிறப்பதும் அக்கரும வாசனையினால் அப்பிறப்பிலும் வேறு சில கருமங் களைச் செய்வதும், அவ்வினைப் பயனால் இறந்து மீளவும் ஒரு பிறப்பிற் பிறப்பதுமாய் இவ்வாறு மாறி மாறிப் பிறந்து பல பிறப்புக்களில் வருந்தும் என்பதாம். “அந்தோ“ என்றது இரக்கக் குறிப்பு. வீழ்வினை - பிறப்பாகிய படுகுழியில் வீழ்தற்குக் காரணமாகிய வினை. |
(இ - ள்.) மன்னா - அரசனே!; காதி அம்கிளைகள்சீறும் - ஞானா வரணீயம், தரிசனாவரணீயம், அந்தராயம், மோகனீயம் என்னுங்காதி கருமக் கூட்டங்களை யொழிக்கின்ற, காமருநெறிக்கும் - அழகிய வீடுபேற்று வழிக்கும், கண்ணாய் - பற்றுக்கோடாய், போதிஅம்கிழவர் தங்கள் தியானத்துப் புலம் கொண்டு ஏத்தி - மெய்யறிவுக்கு உரியவர்களான அடியவர்களால் தங்கள் அறிதுயில் நிலைக்கண் அறிவாற்கண்டு |