பக்கம் : 157
 
போற்றப்பெற்று, ஆதிஅந்து அகன்றுநின்ற - முதலும் முடிவும் இல்லாமல் விலகிநின்ற,
அடிகள் - அருகக்கடவுளது, சரணே - திருவடிகளே, மாதுயர் இடும்பை தீர்க்கும் சரண்
எனப் படுவ - மிக்க துன்பத்தைச் செய்யும் பிறவித்துன்பங்களை யொழிக்கின்ற
அடைக்கலமென்று சொல்லப்படுவன, கண்டாய் - நீ உணர்ந்து கொள்வாயாக, (எ - று.)

அருகக்கடவுளின் திருவடிகளே உயிர்கட்குக் கொடிய பிறவித் துன்பங்களைப்போக்கும்
புகலிடமாம் என்க. கடவுட்குப் பிறப்பும் இறப்பும் இல்லையாதலால், ‘ஆதியந் தகன்று நின்ற
அடிகள்‘ என்றார்.

ஞானாவரணீயம் - அறிவை மறைப்பது. தரிசனாவரணீயம் - காட்சியை மறைப்பது.
அந்தராயம் - நற்பயன்களை விலக்குவது. மோகனீயம் - மோகத்தைவிளைப்பது.
அருகக்கடவுள் வீடுபேற்று வழியை முதன்மறை களைக்கொண்டு விளக்கியதனால்
அந்நெறிக்குக் ‘கண்ணாய்‘ எனப்பட்டார். கிழவர் - உரிமை யுணர்த்தும் கிழமையென்னும்
பண்பினடியாகப் பிறந்த பெயர். போதி - அறிவு. போதியங்கிழவர் - மெய்யறிவுடைப்
பெரியார்.

( 82 )

இரத்தினத் திரயம்

201. மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் 1விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்.
 

     (இ - ள்.) கனபொன்தாரோய் - சிறந்த பொன் மாலையை அணிந்தவனே!,
மெய்ப்பொருள் தெரிதல் - உணர வேண்டிய மெய்ப்பொருள் களை உள்ளவாறுணர்தலும்,
மற்று - பின்பு, அப்பொருள் மிசைவிரிந்த ஞானம் - அப்பொருள்களின் மேலே நன்றாகத்
தெளிந்த அறிவும், அப்பொருள் வழாத - அவ்வாறு தெளிந்த பொருள் நீங்காதனவாக;
தாங்கி - மனத்தில் நிலைபெறுத்தி, நூலின் அருந்தகை ஒழுக்கம் - ஆகமங்களிற் கூறிய
பெறுதற்கரிய விழுப்பத்தைப் பயக்கும் நல்லொழுக்க வழியில் நிற்றலும், இவைகள் கண்டாய்
- இவைகள் மூன்றுமே, இறைவனால் விரிக்கப்பட்ட - அருகக்கடவுளால்
விரித்துரைக்கப்பட்டன, இப்பொருள் -
இந்த மேலான பொருளை, கைப்பொருளாகக் கொண்டு கடைப்பிடி - கையிற் பெற்ற
செல்வமாக நினைத்து மறவாமல் உறுதியாகப் பற்றுவாயாக! (எ - று.)


     (பாடம்) 1 வரிக்கப்பட்ட.