பக்கம் : 158
 

நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்ற இரத்தினத் திரயம் இங்கு உணர்த்தப்பட்டன.
நன்ஞானமாவது பொருள்களின் தன்மைகளை உள்ளபடி உணர்தல். நற்காட்சியாவது
உண்மைப் பொருள்களை ஐயந்திரிபறத் தெளிதல். நல்லொழுக்கம் அணுவிரதமென்றும்
மகாவிரதம் என்றும் இருவகைப்படும். இவற்றில், முன்னையது இல்லறத்தார்க்கும்
பின்னையது துறவறத்தார்க்கும் ஆம்.
“மெய்வகை தெரிதன் ஞானம் விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல் காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியுமென்றான்“
என்றார் திருத்தக்க தேவரும்.

நன்ஞானம், மதிஞானம், சுருதிஞானம், அவதிஞானம் மனப்பரியய ஞானம், கேவல ஞானம்
என ஐந்தாக விரிதலின் விரிந்த ஞானம் என்றார். இவை ஒவ்வொன்றும் மிகப்பலவாம்.

( 83 )

இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்

202. 1உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயரு நீக்கிச்
2சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாக்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்,
மற்றவை 3நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே!, உற்று அடுபிணியும் - உடலிற்சேர்ந்து மிக
வருத்துகின்ற நோய்களையும், மூப்பும் - முதுமைத் தன்மையையும், ஊழ்உறுதுயரும் -
ஊழ்வினைப் பயனால் நேருகின்ற துன்பங்களையும், நீக்கி - ஒழித்து, சுற்றி நின்று உலகம்
ஏத்தும் - சூழ்ந்து நின்று உயர்ந்தவர்களால் போற்றப் பெறுகின்ற, சுடர்ஒளி உருவம் தாங்கி
- விளங்குகின்ற ஒளிவடிவான உருவத்தை யடைந்து, பெற்றதோர் வரம்பில் இன்பம் பிறழ்வு
இலாநிலைமை - பெறுவதாகிய ஒப்பற்ற எல்லையில்லாத இன்பத்தினின்று என்றும்
மாறுதலில்லாதவீடு பேற்று நிலையை அடைதலே, அவை நிறைந்த மாந்தர் - முற்கூறிய
நன்ஞானம் முதலிய அந்த மூன்றும் நிரம்பப் பெற்ற மனிதரால், பெறப்படும் நிலைமை -
அடையப் பெறுகின்ற நிலையாம், கண்டாய் - அறிவாயாக, (எ - று.)


    (பாடம்) 1. உற்றிடு. 2. சுற்றுநின். 3. நிறைந்து.