(இ - ள்.) தாழ்கதிர் - சொரிகின்ற ஒளிகளையுடைய, நாமவேல் நரபதி - அச்சத்தைத் தருகின்ற வேற்படையைத் தாங்கிய சுவலனசடியரசன், வார்பொழில் - நீண்டசோலையிலே, வாமம் மேகலையவர் மனத்தில் - அழகிய மேகலையை அணிந்த தன் மனைவியரது உள்ளத்திலே, காமவேள் இடம்கொள அருளி - காமவேள் இடம் பெறுமாறு பலவகை விளை யாடல்கள்செய்து, கண்ஒளிர் தாமவேல் இளையவர்காப்ப - காண்போர் கண்ணிற்கு அழகாக ஒளிவிடுகின்றதும் மாலையை அணிந்ததுமான வேற்படையையுடைய பெண் மறவர்கள் மெய்காவலாக வர, நகரம் நண்ணினான் - இரதநூபுர நகரத்தை அடைந்தான். (எ - று.) “வாமமே கலையவர் மனத்திற் காமவேள் இடங்கொள அருளி“ என்றதன் கருத்து, தனது உரிமை மகளிருடைய உள்ளத்தில் காம விருப்பம் உண்டாகுமாறு செய்து என்பதாம். வேள் - விரும்பப்படும் அழகினை யுடையான். தாமவேல் இளையவர் என்பதற்கு இளைஞர்களாகிய வீரர்கள் என்று உரை கூறுவாரும் உளர். வாமமேகலையவர் மனத்தில் காமவேள் இடங்கொள விளையாடல்புரிந்த இடமாகலின் பெண்மறவர்களாகக் கொள்ளுதலே தக்கது. |