பக்கம் : 164
 

முதலடியிற் கொடி உவமையாகுபெயராய், நீண்டு வளைந்து அசையும் இயல்பையுடைய
தீச்சுடரைக் குறித்து நின்றது. இரண்டாம் அடியில் கொடியது - அது பகுதிப் பொருள்
விகுதி. குழற்கொடி என்று மூன்றாம் அடியிற் கூறியது இல்பொருளுவமை. நான்காம்
அடியில் எழிற்கொடி - இரவில் எரிவதான அழகிய ஒரு கொடியெனவும்; மின்னற்
கொடியெனவும் கொள்ளலாம்.

( 91 )

மனநலத்தின் மாட்சி

210. முகைத்தவார் முல்லையை முருக்கு 1மெல்லியல்
தகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே.
 

    (இ - ள்.) தகைத்தவார் குழலவள் - கட்டுற்ற நெடியகூந்தலையுடைய வளான
சுயம்பிரபையினது, தன்மை - இயல்பு, முகைத்தவார் முல்லையை முருக்கும் மெல்இயல்
ஆயினும் - அரும்பிய நீண்ட முல்லைக்கொடியை மென்மையிற் கெடுக்கக்கூடியவாறு
அமைந்த மெல்லியல்பேயாயினும், நோன்பு - சுயம்பிரபை மேற்கொள்ள வெண்ணிய
அவ்வரிய நோன்புகள், வகுத்த ஆறு உயர்ந்தன - அவள் முடிவுசெய்துகொண்டபடி
சிறப்பாக நடந்தேறின, மாசுஇலா அகத்து - குற்றமற்ற உள்ளத்தின்கண், மாண்பு
உடையவர்க்கு - மனத்திட்பமாகிய பெருமையை உடையவர்களுக்கு, அரியது இல்லை - அருமையானது இவ்வுலகில் யாதொன்றும் இல்லை, (எ - று.)

சுயம்பிரபையானவள், முல்லைக்கொடியையும், வெல்லுமாறு மென்மை மிக்கவளாயினும், தான்
மேற்கொண்ட நோன்பிற்குரிய ஒழுக்கங்களை யெல்லாம் தன் எண்ணத்தின்படி குறைவற
நன்றாகச் செய்து முடித்தாள். அவள் அவ்வாறு செய்து முடித்ததற்கு அவளுடைய
மனத்திட்பமே காரணம் என்க. முல்லைக்கொடியை மகளிர்க்கு உவமையாகக் கூறுதலை
வேறு நூல்களிலும் காணலாம். அகைத்தல் - தாழ்தல். மாண்பு - செயற்கரியன செய்து
முடிக்குங் கடைப்பிடி. “பெருமையுடையவ ராற்றுவா ராற்றின், அருமையுடைய செயல்“
என்பது திருக்குறள்.

( 92 )

  (பாடம்) 1. மெல்லெயிற்றகைத்த; மெல்லெயில் தகைத்த.