பக்கம் : 165
 

நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்

211.

இந்திர வுலகமும் வணக்கு 1மீடுடைத்
தந்திர நோன்பொளி தவழத் தையலாள்
மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
வந்தர வழற்கொடி யனைய ளாயினாள்.
 

     (இ - ள்.) இந்திர உலகமும் வணக்கும் ஈடுஉடை - இந்திரனது உலகத்தையும்
வணங்குமாறு செய்யும் பெருமையையுடைய, தந்திரநோன்பு ஒளி - மெய்ந்நூல்களிற்
கூறியநோன்பின் விளக்கமானது, தவழ - தன்மேனியில் வெளிப்பட்டுத் தவழா நிற்றலால்;
தையலாள் அச்சுயம்பிரபை, மந்திரநறு நெய்யால் வளர்ந்து - மறைமொழி முறைப்படி
பெய்யப்பட்ட நல்ல நெய்யினால் வளர்ந்து மேலெழுந்து, மாசுஇலா - குற்றமற்றதான,
அந்தர அழல்கொடி அனையள் ஆயினாள் - வானத்தையளாவும் வேள்வித்தீயினது
கொழுந்துபோல்பவள் ஆயினாள், (எ - று.)

சுயம்பிரபை நோன்பாற்றலால் சிறப்பான உடல் ஒளிபெற்று, மறைமொழியோடு
நெய்சொரிந்து வளர்க்கப்பெற்று வானத்தையளாவி யெழுகின்ற வேள்வித் தீயின் சுடர்போல,
எப்புறத்தும் ஒளி வீசி விளங்கினள் என்பதாம். தன்னைக் கடைப்பிடித்தவர்க்கு இந்திர
லோகத்தினும் மேம்பட்ட பதவியை எளிதில் தரவல்லது அந்நோன்பு என்பார், “இந்திர
வுலகமும் வணக்கு மீடுடை நோன்பு“ என்றார், தந்திரம் - வடசொல்; நூல் இங்கே
சைநாகமத்தைக் குறித்து நின்றது.  

( 93 )

நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத்
திருவிழாச் செய்தல்
212. தாங்கருஞ் சுடரொளி சக்கர வாளமென்
றோங்கிரும் பெயர்கோணென் புயர நோற்றபின்


    (பாடம்) 1. பீடுடை.