(இ - ள்.) தாங்கருஞ் சுடர்ஒளி - பொறுத்தற்கரிய மிக்க ஒளியையும், தீங்கரும்பு அனையசொல் சிறுமி - இனிமை மிக்க கருப்பஞ்சாற்றை யொத்த மொழிகளையுமுடைய சுயம்பிரபை, சக்கரவாளம் என்று ஓங்கு இரும்பெயர் கொள் நோன்பு - சக்கரவாளமென்று சிறப்பித்துச் சொல்லப் பெறுகிற பெரிய பெயரைக்கொண்ட நோன்பை, உயரநோற்றபின் - சிறப்பாகச் செய்து முடித்த பிறகு, தெய்வதக்கு - தெய்வமாகிய அருகக் கடவுளுக்கு, ஒரு - ஒப்பற்ற, பெருஞ்சிறப்பு அயர்தல்மேயினாள் - பெரிய திருவிழாச் செய்யலானாள். ஆங்கு - அசைநிலை, (எ - று.) சுயம்பிரபை சக்கரவாளம் என்னும் பெயருடைய நோன்பினைச் செய்து முடித்த பிறகு அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்யலானாள் என்க. ‘தாங்கருஞ் சுடரொளியை‘யைச் சுயம்பிரபைக்கு உண்டாக்கியதெனத், ‘தாங்கருஞ் சுடரொளியை‘ சக்கரவாளத்திற்கு டைமொழியாக்கினுமாம். ஓங்குதல் - உயர்தல். தெய்வதக்கு - தெய்வதத்துக்கு; அத்துச்சாரியை தொக்கது. ‘ஆங்கொடு‘ என்னும் பாடத்திற்கு ஒடுவை இசைநிறையாகக் கொள்க. “ஓடுவுந் தெய்யவும் இசை நிறை மொழியே“ என்பது நன்னூல். “அந்திலாங் கசைநிலை யிடப் பொருளவ்வே“ என்பதனால் ஆங்கு அசைநிலையாதல் காண்க. அப்பொழுது எனப் பொருளுரைப்பினுமாம். |
(இ - ள்.) பங்குனித் திங்களின் உத்தர நாளிற்கு முந்தின நாளில் ஜிநாலயத்திற்குச் சென்று, கடவுளையும் ஆகமத்தையும் வணங்கி, ஆசாரியரைப் போற்றி வேண்டி நோன்பு பெறுதல் வேண்டும். உத்தரநாளில், உண்பன, தின்பன, பருகுவன, நக்குவனவாகிய எல்லாவகையான உணவுகளையும் நீக்கி நோன்பிருத்தல் வேண்டும். அந்தத் திங்களில் இந்த நோன்பிற்குப் பஞ்சகல்யாணம் என்று பெயர். இந்த ஒருநாள் நோன்பைக் கடைப் பிடித்தலால் எண்ணாயிரம் நோன்பின் பயனுண்டாகும் இப்படியே சித்திரை முதலிய திங்கள்தோறும் நோன்பிருந்தல் வேண்டும். |