பக்கம் : 168
 
ஆதியில் இந்த நோன்பு ஸ்ரீவர்த்தமானஸ்வாமிகள் சமவசரணத்தில் கௌதம கணதரரால்,
ஒத்தாயண மகாராசனது மனையாளான இந்திராணி என்பவளுக்கு இயம்பியருளப்பெற்றது.
இல்லறத்தார்கள் தீவினையைப் போக்கிக்கொள்ளுதற்கு இது தக்க வழியாகும். துறக்க
வீடுகட்குக் காரணமாம். இதனை நோற்று விரும்பியவற்றைப் பெற்றவர்கள், இந்திராணி,
ஸ்வயம்பிரபை, குந்தி, சீதாதேவி, சீமதி முதலிய பலர் என்ப. விவரம் விரிந்த சைந
நூல்களில் கண்டுகொள்க.  

( 94 )

சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்குதல்

213. தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் 1டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
2விண்ணவ ருலகமும் வியப்ப வேத்தினாள்.
 

     (இ - ள்.) அண்ணல் அம்கோமகள் - பெருமையிற்சிறந்த அழகிய
சுவலனசடியரசனுடைய மகள் ஆகிய சுயம்பிரபை, தண் அவிர் - குளிர்ச்சியாய்
விளங்குகின்ற, நிலாச்சுடர் தவழும் - திங்களொளி வீசப்பெறும், அவ்வரைக்கண் - அந்த
வெள்ளிமலையினிடத்திலே, அவிர் - விளங்குகின்ற, சென்னிமேல் - முடியின் மீதுள்ள,
கடவுள் தானம் அஃது - கடவுளின் வடிவத்தை; அருச்சித்து - வழிபாடுசெய்து, ஆயிடை -
அவ்விடத்தில், விண்ணவர் உலகமும் வியப்ப ஏத்தினாள் - தேவஉலகத்தினரும் வியந்து
புகழுமாறு போற்றலானாள். (எ - று.)

கடவுள் தானம் அஃது அருச்சித்து - ஸ்ரீ கோயிலில் எழுந்தருளிய அருகக்கடவுட்கு
அருச்சனை செய்து; கடவுள் கோயில் கொண்டுள்ள இடம் கடவுள்தானம்.
விண்ணவருலகமும்; உம் உயர்வு சிறப்பு.  

( 95 )

(வேறு)
வரிப்பாட்டு
சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்

214. ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை

    (பாடம்.) 1. டானமஃகு. 2. தண்ணலம்.