(இ - ள்.) வெஞ்சுடர் வேலவர்க்கு உணர்த்தி - அரண்மனையை யடைந்த சுயம்பிரபையானவள் தன்னுடைய வரவை வெவ்விய ஒளியை யுடைய வேற்படையைத் தாங்கிய தன் தந்தைக்கு முன்னதாகவுணர்த்தி அவனுடைய உடன்பாடு பெற்று, பஞ்சுடைச் சேவடி பரவ - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற தன்னுடைய சிவந்த அடிகளைத் தோழியர் போற்ற, தன் அம்சுடர் மெல்விரல் சிவப்ப - தன் அழகிய ஒளியையுடைய மென்மையான கால்விரல்கள் நடத்தலாற் சிவக்கும்படி, மெல்லச் சென்று - மெதுவாகத் தன்னுடைய தந்தையின் இடத்திற்குச் சென்று, ஆழியின் செஞ் சுடர் அங்கையில் - தந்தையின் மோதிரத்தின் செவ்வொளி திகழ்ந்த அழகிய கையில், சேடம் நீட்டினாள் - மலர்ச் சேடத்தைக் கொடுத்தாள் (எ - று.) தந்தையாக இருப்பினும் அரசனாகையாலும், அரசனுடைய சமயத்தை அறிந்து செல்வதுதான் பருவமங்கையாகிய சுயம்பிரபைக்குத் தகுதியாகலானும், சுயம்பிரபை தன்னுடைய வரவை அரசனுக்கு அறிவித்துச் சென்றாள். |