- அணிந்துள்ள மலர்களின் உள்ளிதழ்களிற் பொருந்தியுள்ள வண்டுகள் அகலும்படி, ஆய்மலர் வல்லியின் வணங்கிய - சிறந்த பூங்கொடியைப்போலப் பணிந்த, மகளை - தன் மகளான சுயம்பிரபையை, முல்லைஅம் சிகழிகை முச்சி மோந்து - முல்லைப்பூ மாலையை அணிந்த அழகிய மயிர்முடியையுடைய உச்சியை மோந்து, இவை சொல்லிய தொடங்கினான் - இந்த மொழிகளைச் சொல்லலானான் (எ - று.) அல்லி - அகவிதழ். “அல்லி அகவிதழ்; புல்லி புறவிதழ்“ என்பன சூத்திரங்கள். அல்லி - பூந்தாது எனினுமாம். சொல்லுபவைகளை அடுத்துவருஞ் செய்யுள்களில் காண்க. |
(இ - ள்.) தேம்துணர் பலவுளவேனும் - தேனையுடைய பூங்கொத்துக்கள் பல இருந்தாலும், செங்குழை மாந்துணர் - செந்நிறமான தளிர்களையுடைய மாமரத்தின் பூங்கொத்து, வயந்தனை மலரத் தோன்றும் - வசந்தகாலம் விளக்கமடையும்படியாக மலரும், பூந்துணர் ஓதி - பூங்கொத்துக்களை யணிந்த கூந்தலை யுடையவளே! நீ பிறந்து - நீ பிறந்தபடியினாலேயே, பொன்செய்தார் வேந்து இறைஞ்ச - பொன்னாற் செய்யப்பட்ட மாலையை அணிந்த அரசர்கள் வந்து வணங்கும்படி, யான் விளங்குகின்றது - நான் சிறந்து விளங்குபடியாகியது. (எ - று.) “மலர்கள் பல இருந்தாலும் மாம்பூவினால் வசந்த காலத்திற்குப் பொலிவு உண்டாவதுபோல, சுற்றத்தார் பலர் இருந்தாலும், நீ பிறந்த பின்புதான் வேற்றுநாட்டரசர் பலர் வந்து வணங்கும்படியான பெருமை எனக்கு உளதாயிற்று“ என்று அரசன் தன்மகளைப் பாராட்டிக் கூறுகிறான். முன்னிரண்டடிகள் உபமானம்; பின்னிரண்டடிகள் உபமேயம். வயந்தனை, ஐ,சாரியை. |