தாமரை பூத்த தடாகத்தை அன்னப்பறவை வண்டு முதலிய சிறந்த உயிர்கள் சேருமே யல்லாமல், காக்கை முதலிய கீழ் உயிர்கள் அடைய மாட்டா; அதைப்போல் நீ பிறந்தபின் இந்த நாட்டில் நல்லவர்கள் சேரலானர் களேயல்லாமல், தீயவர்களால் பீடிக்கப்பட்டுத் தொல்லைக்குள்ளாக வில்லை யென்று அரசன் தன்னுடைய மகளைப் பாராட்டுகிறான். பொய்கை மானிட ரால் ஆக்கப்பெறாத நீர்நிலை என்பது நச்சினார்க்கினியர் கொள்கை. |
(இ - ள்.) வான் அகத்து இளம்பிறை வளர - வானத்திலே இளமையான பிறைத்திங்கள் உண்டாகி வளர்தலால், வையகம் - நிலவுலகம், ஈன் அகத்து இருள்கெட - இவ்விடத்து இருளானது நீங்க, இன்பம் எய்தும் - மகிழ்ச்சியை அடையும், நானகக் குழலி - கத்தூரிப் புழுகு பூசிய கூந்தலையுடையவளே! நீ வளர - நீ பிறந்து வளர்தலால், நம்குடி - நமது குடியானது, தான் அகத்து இருள்கெடத் தயங்குகின்றது - தன்னிடத்திலே பகையிருள் ஒழிந்து விளங்குகின்றது. (எ - று.) விண்ணில் இளம்பிறை தோன்றி வளர்தலால் நிலவுலகம் இருள்கெட இன்பமடைவதுபோல; நீ தோன்றி வளர்தலால் நமது குடி பகையிருள்கெட விளக்கமடைகின்றது என்கிறான் அரசன். ஈனகம் - இவ்விடம். |