(இ - ள்.) கண்பகர் - பெருமையாகப் பேசப்பெறுகிற, மல்லிகை கமழ - மல்லிகைப்பூ மணத்தை வெளிப்படுத்த, காதலால் - அவாவோடு, தனிச் சண்பகவனம் - ஒப்பற்ற சண்பகமரக் காட்டிலும், தும்பிசாரும் - வண்டுகள் சேர்ந்து மொய்க்கும்; பெண்பகர் திரு அனாய் - மகளிருள் சிறப்பித்துப் பேசப்பெறுகிற திருமகளை ஒத்தவளே! நீ பிறந்து நங்குடி - நீ பிறந்ததனால் நமது குடியானது, மண்பகர் உலகு எலாம் மகிழச் செல்லும் - மண்ணுலகமென்று பெயர் கூறப்பெறுகின்ற நிலவுலகத்தவரனைவரும் மகிழுமாறு சிறப்புற்று விளங்கும். (எ - று.) சண்பகம், வேங்கை ஆகிய மரங்களின் மலர்களில் வண்டுகள் அணுகா. அணுகிமொய்த்துத் தேனுண்ணுமாயின் இறந்துபடும். இத்தகைய சண்பகக் காட்டில் மல்லிகைமலர் தோன்றி மணம் வீசுமானால், அது காரணமாக வண்டுகள் அவாக்கொண்டு வந்து மொய்த்தலைப்போல, இயல்பில் பெருஞ்சிறப்பற்றிருந்த நமது குலம் நீ பிறந்தமையினால் எல்லா மக்களும் மகிழும்படி சிறப்புப்பெற்றது என்பதாம். கண்பகர் - எவ்விடத்தும் பேசப்பெறுகிற என்று பொருளுரைப்பினும் பொருந்தும். |
(இ - ள்.) மன்னன் - சுவலனசடியரசன், கொவ்வையந் துவரிதழ்க் கோலவாய் அவட்கு - கொவ்வைப்பழம் போலச் சிவந்த இதழ்களையுடைய அழகிய வாயையுடைய தன் மகளுக்கு, இவ்வகை அணியன கூறி - இவ்வாறு அழகிய மொழிகளைச் சொல்லி, ஈண்டு - இப்பொழுது, நும் அவ்வைதன் கோயில்புக்கு - நின்னுடைய தாயின் அரண்மனையை அடைந்து, அடிசில் உண்க என - உணவு உண்பாயாக என்று கூறி, மவ்வல் அம் குழலியை ஏயினான் - முல்லை மலரை யணிந்த அழகிய கூந்தலையுடைய தன் மகளாகிய சுயம்பிரபையைப் போக்கினான். (எ - று.) சக்கரவாள நோன்பு உணவுவிட்டு நோற்கும் நோன்புகளுள் ஒன்றாகையால், அதன்படி பட்டினிகிடந்த சுயம்பிரபையைத் தன் தாயினிடத்தே சென்று விரைவில் உணவு கொள்ளுமாறு அனுப்பினான் |