மன்னன். கொவ்வை, மவ்வல் என்ற கொடிகளின் பெயர் அவற்றின் பழத்திற்கும் பூவிற்கும் முதலாகுபெயர். இதழ் - உதடு. அணியன கூறி - அழகிய புனைந்துரை மொழிகளை உரைத்து. நும்தாய் என்றது, யான் எம்மூர்க்குச் செல்வேன் என்றாற்போன்று அவளுடன் பிறந்தானையும் உளப்படுத்தி நின்றது. அவ்வை, மவ்வல் - முதற்போலி ஒளவை, மௌவல். அடப்பட்டது அடிசில் என உணவுக்குக் காரணப் பெயர். |
(இ - ள்.) செம்பொனால் மல்கிய முடியினான் - செம் பொன்னினால் செய்யப்பெற்று விளங்குகிற திருமுடியையுடையவனான சுவலனசடியரச னானவன்; பல்கலம் பெரியன அணியில் - பலவகை யணிகலன்களைப் பெரியனவாக வணிந்தால், பாவைதன் அல்குல் நோம் என - சுயம்பிரபை யினுடைய இடையானது வருத்தத்தை யடையுமென்று, சிலம்பு அணிந்து - சிலம்பு என்னும் அணிகலனைப் பூண்டு, என் திருமகள் - என்னுடைய அழகிய செல்வியே! மெல்லவே செல்க என்று - விரைந்து செல்லாமல் மெதுவாகவே செல்க என்று கூறி, மகிழ்ந்து நோக்கினான் - அவள் அவ்வாறு செல்வதைப் பார்த்து மகிழ்ந்தான் (எ - று.) நோன்பினால் தளர்ந்துள்ள சுயம்பிரபை, பெரியவைகளான பல அணிகலன்களை அணிந்து சென்றால் மேலும் வருத்தத்தை அடைவா ளாகலின், சிலம்பை மட்டும் அணிந்து மெதுவாகச் செல்லுமாறு அரசன் கட்டளையிட்டான். |