பக்கம் : 178
 

      (இ - ள்.) மண் அருங்கலம் எலாம் வலிதின் வவ்வினும் - மண்ணுல கத்தேயுள்ள
பெறுதற்கரியவாகிய உயர்ந்த பொருள்களையெல்லாம் வலிதிற் கவர்ந்து உரிமையாக்கிக்
கொண்டாலும், விண் அருங்கலம் எலாம் விதியின் எய்தினும் - விண்ணுலகத்தேயுள்ள
பெறுதற்கரியவாகிய உயர்ந்த பொருள்களையெல்லாம் நல்வினைப்பயனால் அடைந்தாலும்,
பெண் அருங்கலம் இது பெறுதல் - பெண்கட்கெல்லாம் அருங்கலம் போல்வாளாகிய
இவளையடைதல், மானுடர்க்கு - மக்கட்பிறப்பினருக்கு, எண்ணருந் தகைத்து என -
நினைத்தற்கும் அருமையான தன்மையையுடையது என்று, இறைவன் எண்ணினான் -
சுவலனசடியரசன் நினைத்தான் (எ - று.)

நிலவுலகத்தினும் தேவலோகத்தினும் உள்ள அருமையான அணிகலன்களையெல்லாம்,
வலிதிற் கவர்ந்து தன்னுடையன வாக்கிக் கொண்டாலும், இவ்வகையான சிறந்த பெண்ணை
எவ்வகையாலேனும் பெறுதல் மனிதர்கட்கு மனத்தினால் நினைத்தற்கு மரிது என்று
சுவலனசடியரசன் உள்ளத்தில் எண்ணினன் என்பதாம். சுயம்பிரபை அவ்விடமிருந்து
புறப்பட்டுச் சென்றபோது, அரசன் அவளைக்கூர்ந்து நோக்கினான். அப்பொழுது
அவனுடைய உள்ளத்தில் எழுந்த எண்ணம் இதுவாகும். பெண் அருங்கலம் -
பெண்களுக்குச் சிறந்த அணிகலம்போல அழகுசெய்பவள். வித்தியாதரர்களும் முதலில்
மனிதரா யிருந்தவர்களே யாதலால், ‘மானுடர்க்கு‘ என்றான். மேல் தூதுவிடு சருக்கத்துள்.

மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சையாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ

என்பன முதலியவாகக் கூறுதலுங் காண்க.

( 110 )

தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்

229. மையணி வரையின் வாழ மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே.