பக்கம் : 179
 

      (இ - ள்.) மை அணிவரையின்வாழ் - முகில்கள் அழகாகத் தவழுகின்ற
வெள்ளிமலையிலே வாழுகின்ற, மன்னர் வித்தியாதர அரசர்களுடைய, தொல்குடி -
பழமையான குடும்பங்களிலுள்ள, கையணி நெடுநல்வேற் காளைமார்களுள் - கையிற்
பொருந்திய நீண்ட சிறந்த வேற்படையையுடைய இளைஞர்களுள், நெய் அணி குழல்
இவட்கு உரிய நீர்மையான் - எண்ணெய் தடவிய கூந்தலையுடைய சுயம்பிரபைக்குக்
கணவனாதற்குரிய தன்மையுடையவன், மெய்யணி பொறியவன் வீரன் - உடம்பிற்
பொருந்திய நல்ல அழகும் ஆகூழுமுடைய வீரன், எவன்கொல் - யாவனோ? (எ - று.)

இந்த வெள்ளிமலையில் வாழ்கின்ற வித்தியாதர அரச குடும்பத்து மைந்தர்களுள்
சுயம்பிரபைக்குக் கணவனாதற்குத் தகுதிவாய்ந்த நல்லிலக்கண முடையவன் எவனோ என்று
சுவலனசடி எண்ணமிடுகிறான். வெள்ளிமலை முகின்மண்டலம் வரையில்
உயர்ந்தோங்கியுள்ளதாகலின், ‘மையணி‘ வரை என்றார்.

“மேகமே மிடைந்து தாழ விருள்கொண்ட வெள்ளிக் குன்றம்
மாகத்து விளக்கித் தோன்றும் வனப்புநாம் வகுக்க லுற்றால்
நாகந்தான் கரிய தொன்று கீழ்நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட பான்மதி போன்ற தன்றே“

என்னும் சிந்தாமணியும் ஈண்டு எண்ணத்தக்கது.

( 111 )

மங்கையர் இயற்கை

230. பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்னல வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் 1கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ.
 

      (இ - ள்.) பொலம் கலக்கு உரியஆம் - பொன்னினால் ஆகிய அணிகலங்களிற் பதித்தற்கு உரியனவாகிய, பொருவு இல் மாமணி - ஒப்பில்லாத சிறந்த மணிகள், ஈயம் சேர்த்தினும். ஈய அணிகலன்களிற் பதிப்பிக்கத் தொடங்கினும், இலங்கலம் என்னல - யாங்கள் விளங்க மாட்டோம் என்று கூறமாட்டாவாம், குலம்கலந்து இல்வழி - மேன்மையான குல நலம் பொருந்தியில்லாவிட்டாலும், குரவர் கூட்டினும் - தாய் தந்தையர் ஒருவனுக்கு மணஞ்செய்விக்கத் தொடங்கிய காலத்தில், அலங்கல் அம்குழலியர் - மாலையை அணிந்த கூந்தலையுடையவர்களான பெண்கள், அன்று என்கிற்பவோ - அது கூடாதென்று மறுப்பார்களோ? மறுக்க மாட்டார்கள்.
(எ - று.)


  (பாடம்) 1 கூட்டினுங், கலங்கலக் குழலியர்.